நத்தக்காடையூரில் பனியன் நிறுவன வேனை சிறைபிடித்த பொதுமக்கள்

நத்தக்காடையூரில் பனியன் நிறுவன வேனை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நத்தக்காடையூரில் பனியன் நிறுவன வேனை சிறைபிடித்த பொதுமக்கள்
Published on

முத்தூர்,

நத்தக்காடையூர் அருகே உள்ள மொடவந்தான் பள்ளியை சேர்ந்தவர் குணசேகர் (வயது 33). மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு தனது மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அதே நேரம் திருப்பூர் பொன்னாபுரம் சிட்கோ பகுதியில் உள்ள பிராசி என்ற பனியன் நிறுவனத்துக்கு சொந்தமான வேன் ஒன்று தொழிலாளர்களை இறக்கிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்தது.

வேனை திருப்பூரை சேர்ந்த டிரைவர் சதீஸ்குமார் (35) என்பவர் ஓட்டி வந்தார். நத்தக்காடையூர் அருகே உள்ள வேட்டைக்காரன்புதூர் அருகே வந்த போது, வேனின் முகப்பு விளக்கை கண் கூசும் வகையில் எரியவிட்டபடி வந்துள்ளார். இதனால் எதிரே வந்த குணசேகர் தொடர்ந்து தனது மோட்டார்சைக்கிளை ஓட்ட முடியாமல் நிலைதடுமாறி சாலையிலேயே நிறுத்தியுள்ளார்.

சிறைபிடிப்பு

இதனால் வேன் டிரைவருக்கும், குணசேகருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, இருவரும் கைகலப்பில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, சதீஸ்குமார் தாக்கியதில் குணசேகர் படுகாயம் அடைந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு காங்கேயம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 7.30 மணி அளவில் பனியன் நிறுவன தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு நத்தக்காடையூர் கடைவீதியில் கண்ணபுரம் ரோடு பிரிவில் அந்த வேன் வந்துகொண்டிருந்தது. அப்போது குணசேகர், அவருடைய உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சேர்ந்து அந்த வேனை தடுத்து நிறுத்தி சிறைபிடித்தனர். பின்னர் சதீஸ்குமாரை வேனில் இருந்து கீழே இறங்கி வரும்படி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

காலை நேரத்தில் நடந்த இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த காங்கேயம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, வேன் டிரைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறியதுடன், தொழிலாளர்களுடன் பனியன் நிறுவன வேனை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு இரு தரப்பினரும் தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில் காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் நத்தக்காடையூர் கடைவீதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com