மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் தேயிலை தோட்டங்களில் அவதி

மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்காமல் இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் தேயிலை தோட்டங்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
மறுவாழ்வு திட்டங்கள் முழுமையாக கிடைக்கவில்லை: இலங்கையில் இருந்து தாயகம் திரும்பிய மக்கள் தேயிலை தோட்டங்களில் அவதி
Published on

கூடலூர்,

கடந்த 1818ம் ஆண்டு முதல் 1827ம் ஆண்டு வரை மட்டும் கட்டுமான பணிகள் செய்ய ஒப்பந்த அடிப்படையில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 10 ஆயிரம் பேர் இலங்கைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக ராமநாதபுரம் மண்டபம், திருச்சி, அறந்தாங்கி, மதுரை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் ஆங்கிலேயர்கள் ஏஜெண்டுகளை நியமித்து இருந்தனர். மேலும் 1820ம் ஆண்டில் இலங்கையில் காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. கட்டுமானம் மற்றும் தோட்டங்களில் தமிழக மக்கள் பணிக்கு அமர்த்தப்பட்டனர்.

இந்த நிலையில் 1840ம் ஆண்டு புதிய காணிச்சட்டத்தை கொண்டு வந்ததன் விளைவாக சிங்கள மக்களுக்கு சொந்தமான 2 லட்சத்து 58 ஆயிரத்து 72 ஏக்கர் நிலத்தை ஆங்கிலேயர்கள் பறித்தனர். பின்னர் அந்த நிலத்தில் புதிய காபி தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் 1890ம் ஆண்டு அளவுக்கு அதிகமாக நோய் தாக்குதல் ஏற்பட்டதால், காபி விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டது.

இதனால் காணிச்சட்டத்தின்படி சிங்களர்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் ஆங்கிலேயர்கள் தேயிலை தோட்டங்களை உருவாக்கினர். இதற்காக தமிழகத்தில் இருந்து தொழிலாளர்கள் அழைத்து செல்லப்பட்டனர். 1921ம் ஆண்டு வரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 994 பேர் தேயிலை தோட்டங்களில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். மேலும் அவர்களுக்கு இலங்கை குடியுரிமை, வாக்குரிமையும் அளிக்கப்பட்டது.

ஆனால் அடுத்தடுத்த காலக்கட்டங்களுக்கு பிறகு 1947ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், மலையக தமிழர் வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். இதனால் 1948ம் ஆண்டு தமிழக தோட்ட தொழிலாளர் குடும்பங்களின் வாக்குரிமையை இலங்கை அரசு பறித்தது. மேலும் இலங்கையில் எந்தவித உரிமையையும் பெற முடியாத நிலை தமிழர்களுக்கு ஏற்பட்டது. பின்னர் இந்தியா இலங்கை இடையே சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டது.

அதன் அடிப்படையில் சுமார் 5 லட்சம் தமிழர்களை மீண்டும் ஏற்கவும், அவர்களுக்கு இந்திய குடியுரிமை மற்றும் மறுவாழ்வு திட்டங்களை செயல்படுத்தவும் இந்திய அரசு உத்தரவாதம் அளித்தது. இதனிடையே இலங்கையில் போர் தொடர்ந்ததால் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு தமிழர்கள் தாயகம் திரும்பினர். அவ்வாறு வந்த தமிழர்கள் நீலகிரி, வால்பாறை, கொடைக்கானல், கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் மறு குடியமர்த்தப்பட்டனர்.

தற்போது இந்தியா முழுவதும் தாயகம் திரும்பிய தமிழர்கள் சுமார் 15 லட்சம் பேர் வசிப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 2 லட்சம் பேர் உள்ளனர். ஆனால் அவர்களின் சமூக, பொருளாதார நிலை இதுவரை உயரவில்லை என்றே கூறலாம். இந்திய இலங்கை ஒப்பந்தத்தின்படி இரு அரசுகளின் மறுவாழ்வு திட்டங்களும் தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் பின்தங்கிய நிலையில் தேயிலை தோட்டங்கள் மற்றும் கூலி வேலைக்கு சென்று அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து தாயகம் திரும்பிய தமிழர் சக்திவேல் கூறியதாவது:

1960ம் ஆண்டு காலக்கட்டத்தில் இலங்கை மக்கள் தொகையில் 11 லட்சம் பேர் இந்திய வம்சா வழி தமிழர்கள் இருந்தனர். அவர்களுக்கு வாக்குரிமை, குடியுரிமை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இலங்கை எம்.பி.க்களாக தமிழர்கள் அதிகளவு தேர்வு பெற்றனர். இதனால் இந்திய வம்சா வழி தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது. மேலும் 1964ல் சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி சுமார் 5 லட்சம் இந்திய வம்சா வழி தமிழர்களை இந்தியாவுக்கு வரவழைத்து குடியுரிமை அளிப்பதாக இந்தியா உறுதி அளித்தது.

அவ்வாறு தாயகம் திரும்பிய தமிழர்கள் நீலகிரி, கன்னியாகுமரி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். மேலும் திருச்சி பகுதியில் குறைந்த எண்ணிக்கையிலான தாயகம் திரும்பிய மக்களுக்கு விவசாயம் செய்ய பயன்படாத இடத்தில் நிலம் ஒதுக்கப்பட்டது. நிலம் கிடைக்காதவர்கள் தொழில் செய்து பிழைத்து கொள்ள ரூ.3 ஆயிரம் கடனுதவி வழங்கப்பட்டது. ஆனால் மீதமுள்ளவர்களுக்கு டேன்டீ, அரசு நூற்பாலைகளில் வேலை வழங்கப்பட்டது. இன்றைய விலைவாசியை கருத்தில் கொண்டால் தற்போது வரை குறைந்த சம்பளத்திலேயே அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

டேன்டீயில் பணியாற்றும் வரை குடியிருக்க வீடு ஒதுக்கப்படுகிறது. அந்த குடியிருப்புகளும் மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. பின்னர் பணி ஓய்வு பெறும்போது அந்த வீட்டை காலி செய்து நிர்கதியாக நிற்க வேண்டிய நிலையில் அவர்கள் உள்ளனர். இதனால் பட்டா நிலத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் தாயகம் திரும்பிய மக்களுக்கு வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது வழங்கப்படுவது இல்லை. இதனால் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த நிலையில் தாயகம் திரும்பிய மக்கள் உள்ளனர். இதனால் மறுவாழ்வு திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்திய வம்சா வழி மலையகத்தமிழர்கள் பேரவையின் தேசிய ஒருங்கிணைப்பாளர் எம்.எஸ்.செல்வராஜ் கூறியதாவது:

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி இலங்கையில் இருந்து சுமார் 5 லட்சம் தமிழர்கள் இந்தியா திரும்ப வேண்டும். ஆனால் பெரும்பாலான தமிழர்கள் இலங்கையில் வாழ விரும்பினர். இதனால் திட்டமிட்டு இனக்கலவரங்கள் ஏற்படுத்தப்பட்டது. அதன்பின்னர் தமிழர்கள் தாயகம் திரும்பினர். இதற்காக மத்திய மாநில அரசுகள் மறுவாழ்வு திட்டங்களை கொண்டு வந்தது. நீலகிரி, வால்பாறை பகுதியில் அரசு தேயிலை தோட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் குறைந்த சம்பளத்தில் பழுதடைந்த குடியிருப்புகளில் தாயகம் திரும்பிய மக்கள் தோட்ட தொழிலாளர்களாக பணியாற்றி வருகின்றனர். இதேபோல் கன்னியாகுமரி பகுதியில் உள்ள ரப்பர் தோட்ட கழகங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றும் தமிழர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வருகின்றனர்.

மறுவாழ்வு திட்டத்தின் கீழ் குறைந்த எண்ணிக்கையிலான தாயகம் திரும்பிய தமிழர்களுக்கு விவசாயம் செய்ய முடியாத நிலம் ஒதுக்கப்பட்டது. பலருக்கு ரூ.3 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்பட்டது. நீலகிரியில் வசிக்கும் தாயகம் திரும்பிய மக்களின் கைவச நிலங்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்பட வில்லை. குறிப்பாக மறுவாழ்வு திட்ட உதவிகள் தாயகம் திரும்பிய மக்களுக்கு முழுமையாக சேர வில்லை. இதனால் மத்திய, மாநில அரசுகள் உரிய ஆய்வுகள் நடத்தி மறுவாழ்வு திட்டங்களை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.

மிகவும் லாபத்தில் இயங்கி வந்த டேன்டீ நிறுவனம் தற்போது நஷ்டத்தில் இயங்குவதாக கூறி அதனை மூடும் நிலை உள்ளது. இதனால் டேன்டீ கழகத்தை கூட்டுறவு சங்கம் மூலம் நடத்த வேண்டும். தாயகம் திரும்பிய மக்களுக்காக அனைத்து கட்சியினரும் குரல் கொடுக்க வேண்டும். நீலகிரி, கொடைக்கானலில் குடியமர்த்தப்பட்ட தாயகம் திரும்பிய மக்களின் கைவச நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். இதற்காக தனி அரசாணை வெளியிட வேண்டும். இந்திய அரசு இலங்கை மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்து வருகிறது. இதேபோன்று இங்குள்ள தாயகம் திரும்பிய தமிழர்களுக்கும் வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகள் விரைவில் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.

பிளாண்டேசன் லேபர் அசோசியேசன் தலைவர்(ஏ.ஐ.டி.யூ.சி.) டி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

தாயகம் திரும்பிய மக்களுக்கு நீலகிரி, ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காபி, ரப்பர் தோட்டங்கள், நூற்பாலைகளில் வேலை வழங்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு விவசாய நிலம், கடனுதவி வழங்கப்பட்டது. மேலும் போக்குவரத்து கழகத்தில் தாயகம் திரும்பிய மக்களுக்கு பணி வழங்கப்பட்டது. ஆனால் கடந்த காலங்களில் இடஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்பட்டது. தற்போது இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை. இந்தியஇலங்கை ஒப்பந்தத்தின்படி மறுவாழ்வு திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படுவது இல்லை.

தேயிலை, ரப்பர் அரசு தோட்ட கழகங்களில் பணியாற்றும் தாயகம் திரும்பிய மக்களுக்கு குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுகிறது. ஆனால் பணி ஓய்வு பெறும்போது அவர்கள் குடியிருப்புகளை காலி செய்ய வேண்டிய நிலை உள்ளது. குறைந்த சம்பளத்தில் இறுதி வரை பணியாற்றும் தொழிலாளர் குடும்பம் நடத்த வீடு இல்லாமல் வீதியில் நிற்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

இதனால் டேன்டீயில் பணியாற்றி ஓய்வு பெறும் தாயகம் திரும்பிய மக்களின் குடும்பத்துக்கு தமிழக அரசின் பசுமை திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டி கொடுக்க வேண்டும். வேலைவாய்ப்பில் வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடு முறையை மீண்டும் வழங்க வேண்டும். பிரிவு17 நிலத்தில் வாழும் தாயகம் திரும்பிய மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மேலும் மானியத்துடன் கூடிய கடனுதவி வழங்க வேண்டும். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வேண்டும். தாயகம் திரும்பிய மக்களின் நிலை குறித்து மாநில அரசின் மறுவாழ்வுத்துறை இயக்குனர் தினேஷ் பொன்ராஜ் ஒலிவரிடம் முறையிடப்பட்டுள்ளது. இதை கவனத்தில் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாயகம் திரும்பியோர் மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா கூறியதாவது:

சிறிமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் போடப்பட்டு சுமார் 50 ஆண்டுகள் முடிந்து விட்டது. ஒப்பந்தப்படி நீலகிரியில் அரசு தேயிலை தோட்ட கழகம், கன்னியாகுமரி, கேரளாவில் ரப்பர் தோட்ட கழகம், கர்நாடகாவில் காபி எஸ்டேட்டுகளிலும், ஆந்தியாவில் நூற்பாலைகளில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இதுமட்டுமின்றி விவசாய பண்ணை திட்டம் தொடங்கப்பட்டது. மேலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை வழங்கப்பட்டது. புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட இடங்களில் தாயகம் திரும்பிய மக்களுக்கு 3 ஏக்கர் முதல் 3 சென்ட் நிலம் வரை வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நீலகிரியில் இதுவரை நிலம் வழங்கவில்லை. இந்த மக்களுக்காக தொடங்கப்பட்ட நூற்பாலைகள் பெரும்பாலானவைகள் மூடப்பட்டு விட்டது. ரப்பர் மற்றும் தேயிலை தோட்ட கழகங்களும் நலிவடைந்து வருகிறது. இக்கழக நிர்வாகங்கள் வழங்கக்கூடிய சம்பளம் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு மட்டுமே செலவிடப்படுகிறது.

மறுவாழ்வு திட்டங்கள் அனைத்தும் தோல்வியில் தான் முடிந்துள்ளது. வாழ்க்கை தரம் உயர வில்லை. கல்வி, வேலைவாய்ப்பில் 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. தற்போது இடஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. 1984ம் ஆண்டுக்கு முன்பு வரை தாயகம் திரும்பிய மக்கள் வாங்கிய வீட்டுக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் வாங்கிய கடன்கள் தள்ளுபடி செய்யாமல் நிலுவையில் உள்ளது. இதனால் தங்களது பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை அடமானம் வைத்து வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தாயகம் திரும்பிய மக்கள் தவித்து வருகின்றனர். இதனால் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம். இனி மேலாவது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com