

பெருமாநல்லூர்,
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர்-திருப்பூர் மெயின் ரோட்டில் உள்ள அரசு பள்ளி கடந்த 1957-ம் ஆண்டு அன்றைய முதல்-அமைச்சர் காமராஜரால் சமுதாய நல அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தொடங்கிவைக்கப்பட்டது. பின்னர் 1978-ம் ஆண்டு தமிழக அரசால் கூடுதலாக 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டன.
இந்த பள்ளிக்கு பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் வந்து செல்லும் வகையில் இருந்ததாலும் போக்குவரத்து வசதி இருந்ததாலும் அதிக அளவிலான மாணவர்கள் இந்த பள்ளியில் சேர்ந்து படித்தனர்.
இந்த நிலையில் உயர்நிலைப்பள்ளியாக செயல்பட்டு வந்த இந்த பள்ளியில் கடந்த 1995-ம் ஆண்டு தார்சு கட்டிடத்தின் மேற்பகுதி பெயர்ந்து விழுந்துகொண்டிருந்ததாலும், சத்துணவு கூடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், சேதமடைந்து காணப்பட்டதாலும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்து மாணவர்களும் பாலசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடம்மாற்றம் செய்யப்பட்டனர். அதைதொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட இந்த பள்ளி தற்போது கவனிப்பார் இன்றி கிடப்பதால் சமூக விரோதிகளின் புகலிடமாக மாறியது.
எனவே இந்த பள்ளி குறித்து திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமாரிடம் பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். அப்போது செயல்படாமல் உள்ள இந்த பள்ளியை சீரமைத்து பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இது தொடர்பாக கல்வி அமைச்சருடன் கலந்துபேசி நல்லமுடிவு எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ., தெரிவித்தார். இதை தொடர்ந்து சட்டமன்றத்தில் இது தொடர்பான கோரிக்கையை வைத்தார்.
எனவே இந்த பள்ளியின் நிலை பற்றி அறிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெருமாநல்லூர் வந்தனர். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன் (பல்லடம்), முன்னாள் ஒன்றிய தலைவர் சாமிநாதன், ஊராட்சி செயலாளர் உத்தமேஸ்வரன், பொன்னுலிங்கம் உள்பட பலர் உடன் வந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அதைத்தொடர்ந்து அடுத்த வாரத்தில் அந்த பள்ளியை பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி செயல்படுத்த அரசாணை வழங்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்தார்