

நெல்லை
பாளையங்கோட்டையில் பள்ளிக்கூட மாணவமாணவிகளின் 2 நாள் அறிவியல் கண்காட்சி நேற்று தொடங்கியது.
ஒவ்வொரு ஆண்டும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டதின் சார்பில் அரசு பள்ளிக்கூடங்களில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவமாணவிகளின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான 2 நாள் அறிவியல் கண்காட்சி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் நேற்று காலையில் தொடங்கியது. தொடக்க விழா நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைவேலு தலைமை தாங்கி, தொடங்கி வைத்தார்.
நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும், திட்ட ஒருங்கிணைப்பாளருமான சுவாமிநாதன் வரவேற்றுப் பேசினார். நெல்லை கல்வி மாவட்ட அலுவலர் ஜெயபாண்டி, தென்காசி கல்வி மாவட்ட அலுவலர் பாலசிங் பொன்ராஜ் ஆகியோர் பேசினார்கள். உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் தனசிங் ஐசக் மோசஸ் நன்றி கூறினார்.
உணவு, தாதுப்பொருட்கள், உயிரினங்கள், எந்திரங்கள், இயற்கை வளங்கள் உள்ளிட்ட 10 தலைப்புகளில் மாணவர்கள் உருவாக்கிய அறிவியல் படைப்புகளின் மாதிரிகள் கண்காட்சியில் இடம்பெற்று இருந்தன. இந்த கண்காட்சியில் பல்வேறு அரசு பள்ளிக்கூடங்களை சேர்ந்த மாணவர்கள் 100 அரங்குகளை அமைத்து மாதிரிகளை வைத்து இருந்தனர். இன்றும் (வியாழக்கிழமை) கண்காட்சி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதில் முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சி மூலம் தேர்ந்து எடுக்கப்படும் மாணவர்கள், மாநில அளவில் நடைபெறும் கண்காட்சியில் கலந்து கொள்கிறார்கள்.
இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆவுடையப்ப குருக்கள், ஆறுமுக ராஜன், செல்வநாயகம் ஆகியோர் செய்திருந்தனர்.