பிரதமர் மோடி வருகையால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை சித்தராமையா பேட்டி

பிரதமர் மோடி வருகையால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சித்தராமையா கூறினார்.
பிரதமர் மோடி வருகையால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை சித்தராமையா பேட்டி
Published on

பெங்களூரு,

பிரதமர் மோடி வருகையால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று சித்தராமையா கூறினார்.

முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

காங்கிரசுக்கு பாதிப்பு இல்லை

ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கர்நாடகத்திற்கு வந்து பிரசாரம் செய்யலாம். இதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பிரதமர் மோடி, பா.ஜனதா தலைவர் அமித்ஷா உள்பட யார் வந்து சென்றாலும், கர்நாடகத்தில் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் என்பது உறுதி. பிரதமர் மோடி வருகையால் காங்கிரசுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அமித்ஷா கர்நாடகத்திற்கு வருகிறார். கலவரத்தை உண்டு பண்ணுவது அமித்ஷாவின் அடிப்படை நோக்கம்.

அமித்ஷா பேசும்போது கலவரத்தை தூண்டும் வகையிலேயே பேசுகிறார். பொய் குற்றச்சாட்டுகளை கூறுகிறார். வன்முறைக்கு வித்திடுகிறார். கர்நாடகத்தில் அமைதியை சீர்குலைக்கும் அவருடைய முயற்சியை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். சட்டத்தை யார் கையில் எடுத்தாலும் அத்தகையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொய் சொல்வது, எங்களை குறை கூறுவதே பா.ஜனதாவின் தொழில் ஆகும்.

பொய்களை நம்ப மாட்டார்கள்

கர்நாடக மக்கள் பா.ஜனதாவினரின் பொய்களை நம்ப மாட்டார்கள். மகதாயி நதிநீர் பிரச்சினையை தீர்க்க கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதற்கு மோடி எந்த பதிலும் கூறவில்லை. சமீபத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. அதன் பிறகும் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறேன். இந்த பிரச்சினையில் மோடி தலையிட்டு தீர்த்து வைப்பார் என்று நான் நம்புகிறேன்.

கர்நாடகத்திற்கு மத்திய அரசு ரூ.3 லட்சம் கோடி நிதி ஒதுக்கி இருப்பதாக அமித்ஷா கூறியது தவறான தகவல். கர்நாடகத்தில் வசூலாகும் வரியில் இருந்து தான் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. இது மத்திய அரசின் நிதி கிடையாது. மற்ற மாநிலங்களை போல் கர்நாடகத்திற்கும் நிதி பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

பா.ஜனதாவினர் விவாதிக்கட்டும்

தினேஷ் குண்டுராவ், மந்திரி கிருஷ்ண பைரேகவுடா ஆகியோர் நிதி ஒதுக்கீடு பற்றி வெளியிட்ட தகவல் சரியானதே. இது தவறு என்றால் கர்நாடக சட்டசபை கூட்டத்தில் பா.ஜனதாவினர் விவாதிக்கட்டும். அதற்கு நாங்கள் சரியான பதிலை கூறுகிறோம்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com