இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி மீது தேசத்துரோக வழக்கு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண்பார் - கண்ணன் நம்பிக்கை

இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண்பார் என்ற நம்பிக்கை உள்ளது என கண்ணன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி மீது தேசத்துரோக வழக்கு: பிரதமர் மோடி தலையிட்டு தீர்வு காண்பார் - கண்ணன் நம்பிக்கை
Published on

புதுச்சேரி,

புதுச்சேரி மக்கள் முன்னேற்ற காங்கிரஸ் கட்சி தலைவர் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் நடக்கும் வன்முறையை கண்டித்தும், இதில் பிரதமர் நரேந்திரமோடி தலையிடக்கோரியும் திரைப்பட இயக்குனர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூகவியலாளர், சமூக சேவகர், திரைப்பட தயாரிப்பாளர்கள் உள்பட முக்கிய பிரபலங்கள் நரேந்திரமோடிக்கு கடிதம் எழுதினார்கள்.

அந்த கடிதத்தில் கும்பல் வன்முறை நடத்தப்படுகின்றன. அவற்றை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கடிதம் விவகாரம் தொடர்பாக பீகார் போலீசார் இயக்குனர் மணிரத்னம் உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் ஆட்சியை விமர்சிப்பது, குறைசொல்வது, தவறுகளை சுட்டிக்காட்டுவது என்பது அவற்றை சரிசெய்வதற்காக தான். நமது நாட்டின் அடி நாதமே கருத்து சுதந்திரம்தான். அந்த வகையில் மோடிக்கு கடிதம் எழுதியவர்கள் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்துள்ளதை ஏற்கமுடியாது.

உலகளவில் உலக தலைவர்கள் மத்தியில் மிகுந்த நற்பெயரை வாங்கியவர் மோடி. அவர் உள்நாட்டு விவகாரத்தில் தனது நற்பெயரை கெடுத்துக்கொள்ளக்கூடாது. எனவே தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு தீர்வு காண்பார் என நம்புகிறேன். தவறும்பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com