

பரமக்குடி
பரமக்குடி, ராமநாதபுரத்தில் டிரோன் கேமரா மூலம் ஊரடங்கை போலீசார் கண்காணித்தனர்.
டிரோன் மூலம் கண்காணிப்பு
கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதையொட்டி காலை 6 மணி முதல் 10 மணி வரை காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால் விற்பனை மட்டும் வைத்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனாலும் பரமக்குடியில் கொரோனா தாக்கம் குறித்த விழிப்புணர்வு இன்றி பொதுமக்கள் இரு சக்கர வாகனங்களிலும், நடந்தும், சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். போலீசார் தடுப்பு வேலிகள் அமைத்து வாகனங்களை நிறுத்தி அபராதம் விதித்தும் பயன் இல்லாத நிலை உள்ளது.
ஆகவே முழு ஊரடங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன் நேற்று காலை டிரோன் கேமராவை பறக்க விட்டு அதன் மூலம் கண்காணித்தார். அந்த டிரோன் ஐந்து முனைப் பகுதியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய வீதிகளில் ஊரடங்கு நிகழ்வுகளை படம் பிடித்தது. அது படம் பிடித்த காட்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 40 அடி உயரத்திற்கு மேல் பறந்த 3 கிலோ மீட்டர் தூரம் வரையிலான காட்சிகளை அது பதிவு செய்தது. இதன் மூலம் ஊரடங்கு காலத்தில் தேவையின்றி உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் ஊரடங்கு உத்தரவினை கடைப்பிடிக்கவும் அதனை தீவிரமாக கண்காணிக்கவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் உத்தரவின்பேரில் போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை தொழில்நுட்ப பிரிவின் இன்ஸ்பெக்டர் ராஜபாண்டியன், காவலர் குபேந்திரன் ஆகியோர் டிரோன் கேமரா மூலம் ராமநாதபுரம் புதிய பஸ் நிலையம், அச்சுந்தன்வயல், பாரதிநகர் பகுதியில் வானில் டிரோன் கேமரா மூலம் கண்காணித்து பதிவு செய்தனர்.
இந்த காட்சிகளில் தெருக்களில் ஊரடங்கு உத்தரவினை மீறி தேவையின்றி சுற்றி திரிந்தவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கப்பட்டதோடு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
மாவட்டம் முழுவதும் இந்த டிரோன் கேமரா மூலம் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், பொதுமக்கள் அனைவரும் ஊரடங்கு சமயத்தில் கொரோனா பரவலை தடுக்க ஒத்துழைப்பு வழங்குவதோடு பொதுமக்களும் நோயின் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.