

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரனோ வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனை மீறி வெளியில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரித்து வருகின்றனர். ஆங்காங்கே சோதனைச் சாவடிகள் அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர்.
அத்தியாவசிய பணிகள் இன்றி வெளியில் சுற்றுபவர்களை மடக்கி பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர். பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் மாவட்டம் முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தும் பணியில் 2 ஆயிரம் போலீசார் 65 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தீவிரமாக கண்காணிப்பு பணியையும் மேற்கொள்கின்றனர். போலீசாரின் பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தூத்துக்குடி புதிய பஸ் நிலையம், கீழ ரத வீதி, மேலப்பெரிய காட்டன் வீதி, குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பு மற்றும் வி.வி.டி. சிக்னல் சந்திப்பு ஆகிய இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களில் வெளியே வந்தவர்களிடம் விசாரணை நடத்தி, தேவையின்றி வந்திருந்தால் அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தார்.
ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு அறிவுரைகள் வழங்கி, தேவையில்லாமல் வெளியே வந்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் மற்றும் ஆட்டோக்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். மேலும் காலை 10 மணிக்கு மேல் தேவையில்லாமல் வெளியே வருபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்ய மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டு உள்ளார்.