அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி

வடகாடு, அன்னவாசல் பகுதிகளில் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதியடைந்து உள்ளனர்.
அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் அவதி
Published on

வடகாடு,

வடகாடு மற்றும் மாங்காடு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக தென்னை, நெல், வாழை, பலா, முந்திரி, எலுமிச்சை, கத்தரி, மிளகாய், வெண்டை, புடலை மற்றும் மல்லிகை, முல்லை, சென்டி உள்ளிட்ட ஏராளமான பூக்களை பயிரிட்டு உள்ளனர். இவ்வகை பயிர்களுக்கு இரவு, பகலாக ஆழ்குழாய் மின் மோட்டார் மூலமாக தண்ணீர் பாய்ச்சி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த சில வாரங்களாகவே இரவு மற்றும் பகல் நேரங்களில் அடிக்கடி மின்சாரம் தடைப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் 2 மணி நேரம் மட்டுமே வரும் மின்சாரம் அதுவும் எந்த நேரத்தில் வரும் என்று தெரியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இப்பகுதியில் கோவில் திருவிழா நடந்து வருகிறது. அடிக்கடி தடைபட்டு வரும் மின்சாரத்தால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்த வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

அன்னவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான இலுப்பூர், முக்கண்ணாமலைப்பட்டி, சத்திரம், புதூர், காலாடிப்பட்டி, செங்கப்பட்டி, கீழக்குறிச்சி, குடுமியான்மலை, வயலோகம், பரம்பூர், மலைக்குடிப்பட்டி, நார்த்தாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இந்த மின் தடையால் பொதுமக்கள், மாணவர்கள், வியாபாரிகள், வர்த்தக நிறுவனங்கள் என அனைவரும் பாதிப்பு அடைந்து வருகிறார்கள். இதை உடனடியாக சரி செய்து மின்சார வாரியம் சீரான முறையில் மின்சாரம் வழங்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com