

கோத்தகிரி
தேசிய நுகர்வோர் தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் கோத்தகிரி புளூ மவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கலை இலக்கிய போட்டிகள், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா கோத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாநில நுகர்வோர் அமைப்பின் துணைத் தலைவர் ராஜன் தலைமை வகித்தார். சங்கத் தலைவர் வாசுதேவன், வட்ட வழங்கல் அலுவலர் நந்த குமார், பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் பூபதி போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், நுகர்வோர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் கூடுதல் செயலாளர் முகமது சலீம் நன்றி கூறினார்.