தஞ்சையில் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம்

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகஅரசும், மத்தியஅரசும் முயற்சி செய்வதை கண்டித்து தஞ்சையில் வருகிற 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்தார்.
தஞ்சையில் 6-ந் தேதி ஆர்ப்பாட்டம்
Published on

தஞ்சாவூர்;

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகஅரசும், மத்தியஅரசும் முயற்சி செய்வதை கண்டித்து தஞ்சையில் வருகிற 6-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடக்கிறது என காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் தெரிவித்தார்.

கூட்டம்

காவிரி உரிமை மீட்புக்குழு கூட்டம் தஞ்சையில் நடந்தது. கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பொருளாளர் மணிமொழியன், தமிழ்தேசிய பேரியக்க பொதுச் செயலாளர் வெங்கட்ராமன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் மணியரசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது

கர்நாடக அரசு தனது எல்லையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டி தமிழகத்துக்கு வெள்ள நீர் கூட வராமல் தடுக்கும் வேலையில் தீவிரமாக உள்ளது. கர்நாடக அரசின் இந்த சட்டவிரோத செயலை மத்திய அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மேகதாது அணைக்கு அனுமதி கொடுக்கும் முயற்சியில் மத்தியஅரசு ஈடுபட்டு வருகிறது.

பாலைவனம்

இதை வன்மையாக கண்டிக்கிறோம். மேகதாது அணை கட்டினால் தமிழகத்தில் 26 லட்சம் ஏக்கர் பாசன நிலம் பாலைவனம் ஆகிவிடும். 25 மாவட்டங்களுக்கு குடிநீர் கிடைக்காது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் மேகதாது அணை அனுமதிக்கான பொருளை முன்வைக்கிறது ஆணையம். தமிழகஅரசு இதற்கு கண்டனம் செய்வதில்லை.

அனுமதி

வருகிற 27-ந் தேதி (நாளை) நடக்கும் ஆணைய கூட்டத்தில் மேகதாது அணைக்கு அனுமதி கிடைக்கும் என கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சட்டசபையில் தெரிவித்த நிலையிலும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் உள்ளார்.

மேகதாது அணை அனுமதியை பொருள் நிரலில் முன் வைத்தால் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தை புறக்கணிக்கும் முடிவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்கூட்டியே அறிவிக்க வேண்டும். புதுச்சேரி, கேரளா அரசும் இவ்வாறு அறிவிக்குமாறு முதல்-அமைச்சர் வேண்டுகோள் விடுக்க வேண்டும். காவிரி காப்பு நாள் ஒன்றை தமிழக முதல்-அமைச்சர் அறிவித்து ஒட்டுமொத்த தமிழக கட்சிகளும், அமைப்புகளும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுக்க வேண்டும்.

6-ந் தேதி ஆர்ப்பாட்டம்

இந்த கோரிக்கையை வலியுறுத்தி அடுத்தமாதம் (ஜனவரி) 6-ந் தேதி(வியாழக்கிழமை) தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. நெல்லை விற்க ஆன்லைன் பதிவு முறையை கைவிட்டு, நேரடி கொள்முதல் நிலையங்கள் உடனுக்குடன் நேரடியாக நெல்லை வாங்கும் முறையை செயல்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com