குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு

செஞ்சி அருகே குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் - செஞ்சி அருகே பரபரப்பு
Published on

செஞ்சி,

செஞ்சி வட்டம் வல்லம் ஒன்றியத்துக்குட்பட்ட வடவானூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு ஆழ்துளை கிணறு அமைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் கைப்பம்புகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அப்பகுதியில் நிலவும் கடும் வறட்சி காரணமாக அப்பகுதி மக்களுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை. இதனால் கிராம மக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று குடிநீர் பிடித்து வருவதால் அவர்கள் கடும் அவதியடைந்து வந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை குடிநீர் வழங்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று காலையில் காலி குடங்களுடன் வடவானூர் பஸ் நிறுத்தம் அருகே செஞ்சி-திண்டிவனம் சாலையில் மறியலில் ஈடுபட்ட னர். அப்போது அவர்கள் தங்களுக்கு முறையாக குடிநீர் வழங்கக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் குலோத்துங்கன், செஞ்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி, விரைவில் குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்ற கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com