கெங்கவல்லியில் ரூ.3 லட்சம் செலவில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்த பொதுமக்கள்

கெங்கவல்லியில் ரூ.3 லட்சம் செலவில் ஆற்றின் குறுக்கே பொதுமக்கள் பாலம் அமைத்தனர்.
கெங்கவல்லியில் ரூ.3 லட்சம் செலவில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்த பொதுமக்கள்
Published on: 

கெங்கவல்லி,

கடும் சிரமம்

கெங்கவல்லி பேரூராட்சி 9-வது வார்டு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் கடந்த 2 மாதங்களாக அங்குள்ள சுவேதா ஆற்றை கடந்து செல்லும்போது பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வந்தனர். குறிப்பாக பள்ளிக்கு செல்ல முடியாமல் மாணவ, மாணவிகள் பரிதவித்து வந்தனர்.

இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள், கெங்கவல்லி பேரூராட்சி அதிகாரிகள் மற்றும் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை சந்தித்து ஆற்றின் குறுக்கே புதிதாக பாலம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு மனு அளித்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் விரக்தி அடைந்த 9-வது வார்டு பகுதியை சேர்ந்த 300 குடும்பங்கள் ஒன்று சேர்ந்து 50 அடி நீளத்திற்கு தரைப்பாலம் ஒன்றை அமைக்க முடிவு செய்தனர். இதற்காக ரூ.3 லட்சம் செலவில் சிமெண்டு உருளைகுழாய்களை வாங்கி வந்து புதிதாக பாலத்தை அமைத்தனர்.

7 கிலோ மீட்டர்

வருங்காலத்தில் ஆற்றை கடக்கும்போது எந்த ஒரு சேதாரம் ஏற்படாமல் இருக்கவும், பொதுமக்கள் மொபட் மற்றும் மோட்டார் சைக்கிளிலும், நடந்து செல்வதற்கு ஏதுவாகவும் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஊர் பொதுமக்கள் கூறுகையில், இந்த பாலம் அமைப்பதற்கு முன்பு 7 கிலோ மீட்டர் தொலைவில் நடந்து செல்ல வேண்டும். இதனால் அனைவரும் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த 2 மாதத்துக்கு முன்பு சுவேதா நதியில் கழுத்தளவுக்கு தண்ணீர் சென்றதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டோம். குறிப்பாக மருத்துவமனை, பள்ளிக்கூடம் செல்லவும், மளிகை பொருட்கள் வாங்கவும் 7 கிலோமீட்டர் தொலைவில் சுற்றி வரும் சூழ்நிலை நிலவியது. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் நாங்கள் சொந்த செலவில் புதிதாக பாலத்தை அமைத்துள்ளோம், என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com