டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்

விக்கிரமசிங்கபுரம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம்
Published on

விக்கிரமசிங்கபுரம்

விக்கிரமசிங்கபுரம் அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டன.

அவ்வாறு அகற்றப்பட்ட பல்வேறு கடைகள் வேறு இடங்களில் திறக்கப்பட்டன. அதற்கு சில இடங்களில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடைகள் மூடப்பட்டன. சில இடங்களில் கடைகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதேபோல் விக்கிரமசிங்கபுரம் அருகே புதிதாக டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் கஸ்பாவுக்கு தெற்குப்பகுதியில் ஆற்றுக்கு செல்லும் பாதையில் தனியார் இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது.

அங்கு டாஸ்மாக் கடை நேற்று திறக்கப்பட இருப்பதாக தகவல் பரவியது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் நேற்று காலை டாஸ்மாக் கடை கட்டிடம் அமைக்கப்பட்டு உள்ள பாதையில் திரண்டனர். அவர்கள் டாஸ்மாக் கடை திறக்கக்கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தி இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையில் போலீசார் அங்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இங்கு டாஸ்மாக் திறக்கப்பட உள்ளதாக எந்த தகவலும் இல்லை என்று கூறினர்.

அதற்கு பொதுமக்கள், எங்களுக்கு தகவல் தெரிந்துதான் நாங்கள் இங்கு கூடி உள்ளோம். இந்த பாதை வழியாக தான் நாங்கள் பழைய பாபநாசம் கோவிலுக்கு செல்ல வேண்டும். வயல்கள் மற்றும் ஆற்றுக்கு குளிக்க செல்ல வேண்டும் என்றாலும் இந்த பாதையை தான் பயன்படுத்துகிறோம். இங்கு டாஸ்மாக் கடை வந்தால் இந்த வழியாக செல்லும் பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இங்கு டாஸ்மாக் கடை திறக்க வேண்டாம் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளோம் என்றனர். இந்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com