சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

சூளகிரி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சூளகிரி அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
Published on

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள தீயாகர்சனப்பள்ளி ஊராட்சி மோதுகானப்பள்ளி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் மின் மோட்டார் பழுது அடைந்ததால் கடந்த ஒரு வாரமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இதனால் மின் மோட்டார சரி செய்து சீராக குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று கிராமமக்கள் சார்பில் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று காலிக்குடங்களுடன் சூளகிரி செல்லும் சாலையில் மோதுகானப்பள்ளியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சூளகிரி போலீசார் மற்றும் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பாது மின்மோட்டாரை சரி செய்து குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் காரணமாக அந்த பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com