

டி.என்.பாளையம்,
கடம்பூர் அருகே கோட்டமாளத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. நடுநிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்த பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட நேற்று காலை அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்றது.
இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தங்களுக்கு சொந்தமான இடம். இங்கு பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்டக்கூடாது என்று கூறி தடுத்து நிறுத்தினார்கள்.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள், தலைமை ஆசிரியர் சந்தியா என 300-க்கும் மேற்பட்டோர் காலை 10.30 மணி அளவில் கோட்டமாளம் பஸ் நிறுத்தம் முன்பு உள்ள ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டார்கள். இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கடம்பூர் போலீசார், தாளவாடி வருவாய் ஆய்வாளர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது அவர்கள் கூறும்போது, இந்த பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக சுமார் 60 கி.மீ. தூரத்தில் உள்ள சத்தியமங்கலம், தாளவாடிக்கு செல்ல வேண்டியிருந்தது. எனவே மாணவ-மாணவிகளின் நலன் கருதி கோட்டமாளம் அரசு நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் 9, 10 வகுப்புகள் பள்ளிக்கூட கட்டிடத்தின் ஒரு பகுதியிலேயே நடைபெற்று வந்தது. இதனால் மாணவ-மாணவிகள் சிரமப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு ரூ.1 லட்சத்து 68 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1 மாதத்துக்கு முன்பு வருவாய்த்துறையினரால் பள்ளிக்கூடத்துக்கு அருகே உள்ள இடம் நில அளவீடு செய்யப்பட்டு பள்ளிக்கல்வித்துறைக்கு சொந்தமானது என்று உறுதி செய்யப்பட்டது.
ஆனால் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த இடம் தங்களுக்கு சொந்தமானது என்றுகூறி பள்ளிக்கூடத்துக்கு புதிய கட்டிடம் கட்ட தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் பொது சொத்துகளுக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் கட்டிட பணி செய்ய விடாமலும் தடுத்து வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்கள்.
அதற்கு போலீசார், புகார் கொடுங்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறினார். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் மாலை 3 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
அதைத்தொடர்ந்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் சந்தியா கடம்பூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி பள்ளிக்கூட கட்டிடம் கட்டும் பணியை செய்ய விடாமல் தடுத்ததாக அந்த பகுதியை சேர்ந்த கோவிந்தம்மாள் (வயது 50), அவருடைய மகள் மகாலட்சுமி ஆகியோரை கைது செய்தனர். இதுபற்றி அறிந்ததும் கோவிந்தம்மாளின் மகன் மருதாசலம், மருமகன் மாதேஷ் ஆகியோர் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.