புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்

புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கைவிடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரியில் ஆட்டோ தொழிலாளர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும்
Published on

புதுச்சேரி,

புதுவை ஆட்டோ தொழிலாளர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம் முதலியார்பேட்டை ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகத்தில் மாநில தலைவர் பாளையத்தான் தலைமையில் நடந்தது. ஆட்டோ சங்க பொதுச்செயலாளர் சேதுசெல்வம், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவர் அபிஷேகம், பொதுச்செயலாளர் தினேஷ் பொன்னையா ஆகியோர் பேசினார்கள். கூட்டத்தில் ஆட்டோ சங்க பொருளாளர் சேகர், நிர்வாகிகள் செந்தில்முருகன், சிவா, சதாசிவம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

*ஆட்டோவில் பள்ளி மாணவர்கள் 6 பேருக்கு மேல் ஏற்றி செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். இந்த அறிவிப்பின் மூலம் ஆட்டோ தொழிலாளர்களுக்கு வருமான இழப்பு ஏற்படும். எனவே 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புவரை படிக்கும் மாணவர்கள் 10 பேரையும், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் 8 பேரையும் ஏற்றி செல்வதற்கு அனுமதி அளிக்கவேண்டும்.

*புதுவை வரும் சுற்றுலா பயணிகள் ஆட்டோக்களில் தமிழக பகுதிகளில் உள்ள ஆரோவில், பஞ்சவடி ஆஞ்சநேயர் கோவில், பிரித்தியங்கிரா கோவில் ஆகிய இடங்களுக்கு செல்லும்போது தமிழக போலீசார் ஆட்டோக்களை மடக்கி அபராதம் விதிக்கின்றனர். எனவே புதுவை அரசு தமிழக அரசுடன் பேசி புதுச்சேரி எல்லையில் இருந்து 16 கிலோ மீட்டர் தூரம் வரை ஆட்டோக்கள் சென்று வரும் வகையில் அனுமதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*அனுமதியின்றி இருசக்கர மோட்டார் வாகனங்களை வாடகைக்கு விடுபவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*அரசு நிறுவனங்களான பாசிக், பாப்ஸ்கோ மூலம் நியாயமான விலைக்கு ஆட்டோ உதிரி பாகங்களை விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

*அரசு காலம் கடத்தாமல் நிதி ஒதுக்கீடு செய்து ஆட்டோ தொழிலாளார் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேற்கண்டவாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Daily Thanthi
www.dailythanthi.com