ராஜேந்திர பாலாஜி வங்கி கணக்குகள் முடக்கமா?

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதா? என்பதற்கு அவர் மீதான வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் பதில் அளித்தார்.
ராஜேந்திர பாலாஜி வங்கி கணக்குகள் முடக்கமா?
Published on

விருதுநகர்,

முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டதா? என்பதற்கு அவர் மீதான வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் பதில் அளித்தார்.

ராஜேந்திரபாலாஜி வழக்கு

வேலை வாங்கித்தருவதாகவும், கட்சிக்கு செலவு செய்த பணத்தை திருப்பி தராமலும் மோசடி செய்ததாக முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி விஜயநல்லதம்பியும், சாத்தூரை சேர்ந்த ரவீந்திரனும் கொடுத்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் மோசடி வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, ராஜேந்திர பாலாஜியை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். அவரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைத்துள்ளது மட்டுமின்றி, அவர் வெளிநாடுகளுக்கு செல்லாமல் இருக்க விமான நிலையங்களுக்கு லுக்அவுட்' நோட்டீசும் அளித்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஒருவர், அரசு பள்ளியில் உதவியாளர் வேலைக்காக திருச்சியை சேர்ந்த ஒரு பள்ளி நிர்வாகி மூலம் ராஜேந்திர பாலாஜியிடம் ரூ. 11 லட்சம் கொடுத்துள்ளதாகவும் புகார் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

வங்கிக்கணக்குகள் முடக்கமா?

இந்தநிலையில் சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்னும் தொடங்கவில்லை. அந்த மனு தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே ராஜேந்திர பாலாஜிக்கு மேலும் நெருக்கடி அளிக்கும் வகையில் அவரது, 6 வங்கி கணக்குகளை முடக்கியதாக தகவல்கள் வெளியானது.

இதுபற்றி ராஜேந்திரபாலாஜி தொடர்புடைய மாசடி வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும் போது, ராஜேந்திர பாலாஜியின் வங்கி கணக்குகளை முடக்குவது தொடர்பாக அரசுதான் உரிய நடவடிக்கை எடுக்க முடியும். அவரை தேடும் பணியில் நாங்கள் ஈடுபட்டு உள்ளோம். பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள் என்றார்.

அதே நேரத்தில் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது உண்மையா? என்பதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தவும் மறுத்துவிட்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com