

சிவகாசி,
சிவகாசி அருகே ராஜேந்திரபாலாஜியை முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நேற்று சந்தித்தனர்.
முன்னாள் அமைச்சர்கள்
பண மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு 4 வாரம் இடைக்கால நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இதனை தொடர்ந்து திருச்சி சிறையில் இருந்து கடந்த 13-ந்தேதி விடுதலை செய்யப்பட்டார். விடுதலையான அவர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் வீட்டில் தங்கி உள்ளார்.
இந்தநிலையில் நேற்று மதியம் முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார். சி.வி.சண்முகம், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான் மற்றும் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜேந்திரபாலாஜியின் வீட்டுக்கு நேற்று மாலை 4.30 மணிக்கு வந்தனர்.
வரவேற்பு
முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளை ராஜேந்திரபாலாஜி சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர் வீட்டிற்குள் சென்ற அவர்கள் ராஜேந்திரபாலாஜியிடம் பேசினர். அதன் பின்னர் மாலை 6 மணிக்கு முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. சிவகாசியில் உள்ள விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் கே.டி. ராஜேந்திரபாலாஜி, மாபா பாண்டியராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.