ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் சந்தேக வாலிபரிடம் போலீசார் விசாரணை

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை டீனுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில், மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல் சந்தேக வாலிபரிடம் போலீசார் விசாரணை
Published on

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் டீன் நாராயணபாபுவுக்கு நேற்று முன்தினம் இரவு திருவல்லிக்கேணி பகுதியில் வசித்துவரும் ஒருவர் முகவரில் இருந்து மர்மகடிதம் வந்தது. அதில், தமிழகத்தில் ஆரம்ப சுகாதாரத்துறை முழுவதும் சீரழிந்து உள்ளது. ஆகவே அரசு மருத்துவர்களாகிய நீங்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து அரசுக்கு எதிராக போராட வேண்டும். இல்லையெனில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் வெடிகுண்டு வெடிக்கும் என எழுதியிருந்தது.

அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த டீன், உடனே மர்மகடிதம் குறித்து மருத்துவமனை வளாகத்தில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த கடிதத்தை பெற்று பூக்கடை போலீஸ் நிலையத்திற்கு அனுப்பினர். பூக்கடை போலீசார் அந்த கடிதத்தில் உள்ள முகவரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த முகவரியில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் கொண்ட நபர் இருந்தார். அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துவந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த நபர், இந்த கடிதத்தை நான் அனுப்பவில்லை. என்னை பழிவாங்குவதற்காக யாரோ எனது முகவரியை போட்டு இந்த கடிதத்தை அனுப்பி உள்ளனர் என்றார்.

இதுதொடர்பாக போலீசார் அந்த நபரின் நண்பர்கள் மற்றும் விரோதிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த நபர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் உள்ளதால் அவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com