

ஜெயங்கொண்டம்:
கர்ப்பிணி மர்ம சாவு
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூர் கிராமத்தை சேர்ந்த பழனிவேலின் மகள் ரேணுகா (வயது 26). இவருக்கும், குவாகம் கிராமத்தை சேர்ந்த சுபாஷ் என்பவருக்கும் கடந்த 14 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. தற்போது ரேணுகா 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் ரேணுகாவின் உறவினர்கள் 5-ம் மாத சீர் செய்ய குவாகம் சென்றனர். அப்போது வீட்டில் உள்ள அறையில் ரேணுகா மர்மமான முறையில் தூக்கில் தொங்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், ரேணுகாவை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மகள் சாவில் மர்மம் இருப்பதாக பழனிவேல் கொடுத்த புகாரின் பேரில் குவாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் கோட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.
முற்றுகையிட முயற்சி
இந்நிலையில் ரேணுகாவின் உடல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை ஆய்வு செய்வதற்காக மாவட்ட கலெக்டர் ரத்னா, உடையார்பாளையம் கோட்டாட்சியர் அமர்நாத் ஆகியோர் நேற்று வந்தனர்.
அப்போது அங்கு ரேணுகாவின் உடலை பெறுவதற்காக காத்திருந்த அவரது தாய் மற்றும் உறவினர்கள், அவ்வழியே வந்த மாவட்ட கலெக்டர் வாகனம் மற்றும் கோட்டாட்சியர் வாகனம் முன்பு, ரேணுகாவின் சாவுக்கு நீதி கேட்டும், அவரது கணவரை கைது செய்யக்கோரியும் திடீரென முற்றுகையிட முயன்றனர். அவர்களுடன் அப்பகுதி பொதுமக்களும் இருந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு தேவராஜ் தலைமையிலான சப்-இன்ஸ்பெக்டர் வசந்த் உள்ளிட்ட போலீசார் மற்றும் அதிகாரிகள், பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் தெரிவித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டு அவர்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.