

திருவொற்றியூர்,
திருவொற்றியூரை அடுத்த விம்கோ நகர் ரெயில் நிலையம் அருகில் 100-க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் காய்கறி, மளிகை உள்ளிட்ட கடைகள் நடத்தி வருகின்றனர். அந்த பகுதியில் உள்ள ரெயில்வே கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்காக அங்குள்ள கடைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு, இதற்கான நோட்டீஸ் கடைகளில் ஒட்டி வைக்கப்பட்டது. இதற்கு சாலையோர கடை வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும். அதுவரை தங்களது கடைகளை அகற்றக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்று வருவாய்த்துறை, மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போலீசார் உதவியுடன் விம்கோ நகர் ரெயில்வே கேட்டின் அருகே சாலையோரம் இருந்த கடைகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்துக்காக மாற்று இடம் வழங்கக்கோரி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனாலும் தொடர்ந்து கடைகளை இடித்து அப்புறப்படுத்தும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.