

திருப்பத்தூர்,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டிற்கான தடையை நீக்கக்கோரி அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழரின் பாரம்பரிய போட்டியாக உள்ள ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு தடை நீங்க மத்தியமாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம் நடத்தி வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் திருப்பத்தூர் அருகே மஞ்சுவிரட்டிற்கு பெயர் பெற்ற சிராவயல் மஞ்சுவிரட்டு திடலில் அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் முழக்க போராட்டம் நடைபெற்றது. இதற்கு சிவகங்கை மாவட்ட ஜல்லிக்கட்டுப் பேரவை தலைவர் வேலுச்சாமி அம்பலம் தலைமை தாங்கினார். தி.மு.க. சார்பில் முன்னாள் அறநிலையத்துறை அமைச்சரும், திருப்பத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான கே.ஆர்.பெரியகருப்பன், இலக்கிய அணி முன்னாள் அமைச்சர் தென்னவன், நெடுமறம் இளங்கோ, முன்னாள் பேரூராட்சி தலைவர் சாக்ளா, கே.எஸ்.நாராயணன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மோகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சங்கு உதயகுமார், தே.மு.தி.க. சார்பில் ருக்மாசரவணன், ம.தி.மு.க. இருதயராஜன், விடுதலை விரும்பி, தமிழர் தேசிய முன்னணி சார்பில் மாநிலச் செயலாளர் மாறன், தமிழர் முன்னணி தேசியச் செயலாளர் இமயம் சரவணன், சமத்துவ மக்கள் கட்சி பிரான்சிஸ் அந்தோணி, ஜல்லிக்கட்டுப் பேரவை மாநில செயலாளர் நாராயணன், காங்கிரஸ் சார்பில் மாங்குடி, திருப்பதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வனவிலங்கு காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கக்கோரியும், நிபந்தனை இல்லாமல் ஜல்லிக்கட்டு நடைபெறவும் வழிவகை செய்ய வேண்டும், அனைத்து கிராமங்களிலும் மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயம் நடத்தக்கோரியும் தொடர் முழக்கமிட்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிராவயல் மஞ்சுவிரட்டு விழாக்குழு மற்றும் அனைத்து மஞ்சுவிரட்டு, ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தய ஆர்வலர்கள் மற்றும் சிராவயல் சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதேபோல் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாட்டில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், ஜல்லிக்கட்டு மீதான தடையினை நீக்கக்கோரி வகுப்புகளை புறக்கணித்துவிட்டு கல்லூரி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.