

தளி:
உடுமலை பகுதியில் இயங்கி வருகின்ற உணவகங்கள், சிற்றுண்டி, தள்ளுவண்டி, தின்பண்டங்கள் கடைகளில் மறுசுழற்சி எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருவதாகவும் இதற்கு அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மறுசுழற்சி எண்ணெய்
உடுமலைப்பகுதியில் ஏராளமான உணவகங்கள், சிற்றுண்டி, தள்ளுவண்டி, துரிதவகை உணவு தயாரிப்பு கடைகள் இயங்கி வருகின்றன. அவற்றில் விதவிதமான உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் உணவுத்தயாரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எண்ணெய் மறுசுழற்சி முறையில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் அதில் தயாராகும் உணவுப்பொருட்கள் பொதுமக்களுக்கு பல்வேறுவிதமான உடல் உபாதைகளை தோற்றுவித்து வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
சுத்தமான சுகாதாரமான முறையில் அறுசுவையுடன் கூடிய உணவுகளை வீட்டில் தயாரித்தாலும் ஒரு சிலர் உணவகங்களில் சென்று உணவருந்துவதையே அதிகம் விரும்புகின்றனர். மனதை சுண்டி இழுக்கும் உணவின் கலரும் நறுமணத்தை அள்ளித்தந்து அதை சுவைக்கத்தூண்டும் உணர்வையும் ருசியையும் ஏற்படுத்தும் வாசனை பொருட்களே அதற்கு காரணமாகும்.
அதுமட்டுமின்றி உணவிற்கு சுவை கூட்டவும் செரிமானம் ஆகவும் எண்ணெய் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால் உடுமலை பகுதி உணவகங்களில் சிற்றுண்டி தள்ளுவண்டி கடைகளில் மறுசுழற்சி எண்ணெய் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு செய்வார்களா?
லாபம் மற்றும் வியாபார நோக்கத்துடன் செயல்பட்டு வரும் ஒரு சிலரால் உடல் நலம் சீர் கெடுவதுடன் பல்வேறுவிதமான உடல் உபாதைகளுக்கும் பொதுமக்கள் ஆளாகி வருகிறார்கள். எனவே உடுமலை பகுதியில் உள்ள உணவகங்கள், தள்ளுவண்டி, சிற்றுண்டி, துரிதவகை உணவு தயாரிப்பு கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத் துறை ஆய்வு செய்து மறுசுழற்சி எண்ணெய் பயன்பாட்டை தடுக்க வேண்டும்.
அத்துடன் தரமான பொருட்களை தயாரித்து பொதுமக்களுக்கு வழங்குவதற்கு கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.