

நாகர்கோவில்,
குடியரசு தினவிழா
நாடு முழுவதும் குடியரசு தினவிழா இன்று (வியாழக்கிழமை) கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடியரசு தினவிழா நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இன்று நடக்கிறது. விழாவில் குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கலந்துகொண்டு கொடியேற்றி வைக்கிறார்.
இந்த விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 98 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. 5 பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன. முன்னதாக போலீசாரின் அணிவகுப்பும் நடைபெறுகிறது.
பாதுகாப்பு
குடியரசு தினத்தையொட்டி குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின்பேரில், குமரி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் மக்கள் கூடும் இடங்கள், சுற்றுலாத்தலங்கள், சிறப்பு வாய்ந்த மும்மத வழிபாட்டுத்தலங்கள், கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட பகுதிகள், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்கள் போன்றவற்றில் சமார் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கடலோரப்பகுதிகளில் போலீசார் பகல், இரவு நேரங்களில் ரோந்து சுற்றி வந்து கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
குமரி மாவட்ட ரெயில் நிலையங்களில் மெட்டல் டிடெக்டர் வாசல்கள் அமைக்கப்பட்டு ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் சோதனையிடப்படுகின்றனர். நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் மெட்டல் டிடெக்டர் வாசல் அமைத்து பயணிகள் சோதனையிடப்படுவதோடு, அவர்கள் கொண்டு வரும் பேக், சூட்கேஸ் போன்ற பொருட்கள் அனைத்தும் ஸ்கேனிங் எந்திரம் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளால் சோதனை செய்யப்பட்ட பிறகே ரெயில் நிலையத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன.
மாவட்டம் முழுவதும்...
மேலும் குமரி மாவட்டம் முழுவதும் ரெயில் தண்டவாளங்களிலும் அவ்வப்போது வெடிகுண்டு கண்டறியும் கருவிகள் மூலம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரும் சோதனை நடத்தி வருகிறார்கள். ரெயில் தண்டவாளங்களின் முக்கிய பகுதிகள், ரெயில்வே பாலப்பகுதிகள் போன்றவற்றில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். குமரி மாவட்டம் வழியாக வந்து செல்லும் ரெயில்களில் பாதுகாப்பு பணிக்காக கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் மாவட்டத்தில் கன்னியாகுமரி, குழித்துறை, இரணியல் உள்ளிட்ட ரெயில் நிலையங்களிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.