சின்னசேலம் அருகே கீழ்குப்பம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்புக்கு எதிர்ப்பு

சின்னசேலம் அருகே கீழ்குப்பம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
சின்னசேலம் அருகே கீழ்குப்பம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிப்புக்கு எதிர்ப்பு
Published on

சின்னசேலம்,

சின்னசேலம் அடுத்த வி.கூட்டு ரோட்டில் இருந்து விருத்தாசலம் வரையில் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் கீழ்குப்பத்தில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டு இருந்தது. இந்த சுங்கச்சாவடியில் நேற்று முதல் கட்டணம் வசூலிக்கும் பணியை தொடங்கினர்.

இதுபற்றி அறிந்த அந்த பகுதி பொதுமக்கள், எதிர்ப்பு தெரிவித்து சுங்கச்சாவடி முன்பு சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்த சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது அவர்கள், வி. கூட்டு ரோட்டிலிருந்து விருத்தாசலம் வரையிலான சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக இருப்பதுடன்,இதனால் தினசரி விபத்துகள் ஏற்படுகிறது.

மேலும் சுங்கச்சாவடியில் இருசக்கர வாகனங்கள் செல்ல தனி வழிஇல்லை, ஆம்புலன்ஸ் மற்றும் ரெக்கவரி வாகனம் வசதி, வாகனங்கள் நிறுத்துமிடம் என்று எந்த ஒரு வசதிகளும் இல்லாத நிலையில் இந்த சுங்கச்சாவடி உள்ளது. எனவே இங்கு கட்டணம் வசூலிக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக மனு ஒன்றையும் போலீசாரிடம் அவர்கள் அளித்தனர்.

மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதற்கிடையே தற்காலிகமாக சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com