

திருப்பூர்,
திருப்பூர் மாநகரில் அதிக வாகனப்போக்குவரத்து உள்ள முக்கிய சாலைகளில் பொதுமக்கள் எளிதாக சாலையை கடக்கும் வகையில் நடைமேம்பாலங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ரெயில் நிலையம், பார்க் ரோடு, நல்லூர் ஆகிய இடங்களில் மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது புஷ்பா ரவுண்டானா பகுதியில் இதற்கான பணி நடந்து வருகிறது. ஆனால், டவுன்ஹால் பகுதியில் நடந்து வந்த பாலம் அமைக்கும் பணி தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இங்கு பொதுமக்கள் சாலையை கடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரின் வாகனப்போக்குவரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த பகுதி உள்ளது. இங்கு எப்போதும் வாகனங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருப்பதால் இந்த சாலையை கடப்பது பொதுமக்களுக்கு மிகவும் சவாலான விஷயமாக உள்ளது. குறிப்பாக காலை மற்றும் மாலை நேரத்தில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இந்த வழியாக செல்கின்றனர். அணிவகுத்து செல்லும் வாகனங்களுக்கிடையே ஆபத்தான வகையில் அவர்கள் சாலையை கடந்து செல்கின்றனர். இதேபோல், குமரன் ரோட்டில் இருந்து ரெயில் நிலையம், காதர்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்களும் ஆபத்தான முறையில் சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, இந்த பகுதியில் கிடப்பில் உள்ள நடை மேம்பால பணியை முடுக்கி விடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.