

திருச்சி, ஜன.20-
திருச்சியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
உதவி செயற்பொறியாளர்
திருச்சி கருமண்டபம் சக்தி நகர் 11-வது தெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 39). இவர் மணப்பாறையில் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட தனது சொந்த ஊரான பெரம்பலூருக்கு கடந்த 14-ந்தேதி மனைவி மற்றும் குழந்தைகளுடன் சென்றார்.
இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு துரைராஜ் குடும்பத்தினருடன் திருச்சி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
40 பவுன் நகை
பின்னர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோவின் கதவு உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. அதுமட்டுமின்றி பூஜை அறை, சமையல் அறை உள்ளிட்ட அலமாரிகள் உடைக்கப்பட்டு பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. பீரோவில் இருந்த 40 பவுன் நகை, ரூ.40 ஆயிரம், படுக்கை அறையில் இருந்த விலை உயர்ந்த மடிக்கணினி, பூஜை அறையில் இருந்த வெள்ளி காசுகள், வெள்ளிக்கொலுசு மற்றும் சமையல் அறையில் இருந்த வெள்ளித்தட்டுகள் என 4 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளை அடித்து சென்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து துரைராஜ் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினர். மேலும் விரல்ரேகை நிபுணர்கள் வந்து ரேகைகளை பதிவு செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பேராசிரியர்
இதேபோல் திருச்சி கருமண்டபம் வசந்த் நகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் மணிகண்டம் பகுதியில் உள்ள வேளாண் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து வெள்ளி பொருட்களை திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் செசன்சு கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.