

சிவகங்கை,
சிவகங்கை அருகே போலீசாரை வாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடிய ரவுடி என்கவுண்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
மதுரை விமான நிலைய பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் காருக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக 6 பேர் நேற்று முன்தினம் இரவு வந்தனர். பெட்ரோல் நிரப்பிய பின் பணம் கொடுக்காமல் பங்க்கில் இருந்த ஊழியர்களை தாக்கியதுடன், அவர்கள் வைத்திருந்த பணப்பையையும் பறித்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மதுரை மற்றும் சிவகங்கை போலீசார் உஷார்படுத்தப்பட்டு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சிவகங்கை நோக்கி நேற்று காலை அந்த கும்பல் காரில் வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது.
இதையடுத்து சிவகங்கை போலீஸ் ஏட்டு வேல்முருகன், போலீஸ்காரர் சிலம்பரசன் ஆகியோர் மோட்டார் சைக்கிளில் அந்த காரை துரத்தினர். காயாங்குளம் என்ற இடத்தில் அந்த கும்பல் காரை நிறுத்தி ஏட்டு வேல்முருகனை வாளால் வெட்டிவிட்டு, மீண்டும் தப்பிச்சென்றது. தொடர்ந்து போலீசார் துரத்தி வருவதை அறிந்த அந்த கும்பல், நைனாகுளம் பகுதியில் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு, அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஓடியது.
இதனால் அவர்களை தேடி காளையார்கோவில் சப்இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சையது அலி ஆகியோர் சென்றனர். அப்போது முட்புதரில் மறைந்திருந்த அந்த கும்பல் சப்இன்ஸ்பெக்டர்களை வாளால் வெட்டி விட்டு தப்ப முயன்றது.
அப்போது, சப்இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தற்காப்புக்காக தனது துப்பாக்கியால் சுட்டார். இதில் ஒருவர் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் தப்பி விட்டனர். காயம் அடைந்த நபர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்து போனார். போலீசார் நடத்திய விசாரணையில், என்கவுண்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்டவர் சிவகங்கையை அடுத்த வைரம்பட்டியை சேர்ந்த ரவுடி கார்த்திகைசாமி (வயது 30) என தெரியவந்தது.
ரவுடிகள் வாளால் வெட்டியதில் காயம் அடைந்த சப்இன்ஸ்பெக்டர்கள் பூமிநாதன், சையது அலி, ஏட்டு வேல்முருகன் ஆகியோர் சிவகங்கை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சிவகங்கை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மற்ற 5 பேரையும் தேடி வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் கூறுகையில், சுட்டுக்கொல்லப்பட்ட கார்த்திகைசாமி மீது சிவகங்கை மாவட்டத்தில் 23 வழக்குகளும், திருப்பூர், சென்னை, மதுரை, கோவை, நெல்லை போன்ற மாவட்டங்களில் 11 வழக்குகளும் உள்ளன. கார்த்திகைசாமி எப்போதும் வாளுடனே இருப்பார். ஏற்கனவே இவர் பலமுறை கைது செய்யப்பட்டுள்ளார் என்றார்.