

புதுச்சேரி,
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த சுந்தராஜனின் மனைவி கீதா(வயது 45). புதுவை பிருந்தாவனத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். அங்கு விவசாய கடன் வழங்கும் பிரிவில் இருந்தார். இவர் கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு காலத்தில் விவசாயிகள் பலருக்கு கடன் வழங்க அனுமதித்தாக கூறப்படுகிறது.
இதில் ராமு என்பவருக்கு ரூ.12 லட்சத்து 48 ஆயிரம் கடன் வழங்க ஒப்புதல் அளித்து அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகளாகியும் அவர் அசலையும், வட்டியையும் திருப்பிச் செலுத்தவில்லை.
இதற்கிடையே வங்கி நிர்வாகம் சமீபத்தில் ஆய்வு நடத்தியது. அப்போது ராமுவின் வங்கி கணக்கில் சிலமுறை கேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வங்கி நிர்வாகம் ராமுவிடம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் வங்கியில் எந்த கடனும் வாங்கவில்லை என தெரியவந்தது.
பெண் அதிகாரிக்கு வலைவீச்சு
அதே நேரத்தில் அவரது வங்கி கணக்கில் பணம் செலுத்தப்பட்டு அந்த தொகை சில நாட்களிலேயே வேறு வங்கி கணக்குக்கு மாற்றி மோசடி செய்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது விவசாய கடன் பிரிவு உதவி மேலாளர் கீதா மற்றும் அவரது உறவினர்கள் ராமுவின் வங்கி கணக்கில் இருந்து அந்த பணத்தை எடுத்து நூதனமாக மோசடியில் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் இதுகுறித்து வங்கி பொதுமேலாளர் சுப்பிர மணியனிடம் தெரிவித்தனர். அதுகுறித்து அவர் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து வங்கியின் உதவி மேலாளர் கீதாவை வலைவீசி தேடிவருகிறார்கள். பெண் அதிகாரி ஒருவர், வாடிக்கையாளரின் வங்கி கணக்கில் கடன் தொகையை வரவு வைத்து மோசடியில் ஈடுபட்ட விவகாரம் வங்கி வட்டாரத்தில் பர பரப்பை ஏற்படுத்தி உள்ளது.