

தாம்பரம்,
தாம்பரம் பகுதியில் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா, தீவிர டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தாம்பரம் சானடோரியத்தில் உள்ள சென்னை ஏற்றுமதி மண்டல வளாகத்தில் அவர் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது அங்கு 4 தனியார் ஏற்றுமதி நிறுவனங்களில் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், அங்கு கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி இருப்பதையும் கண்டுபிடித்தார். இதையடுத்து அந்த 4 நிறுவனங்களுக்கும் மொத்தம் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.
இதேபோல் கிழக்கு தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் கட்டுமான பணியின் போது சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாக அந்த கட்டுமான நிறுவனத்துக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அப்போது மாவட்ட கலெக்டர் பொன்னையா கூறியதாவது:-
தனியார் மருத்துவமனைகளுக்கு சீல்
பொதுமக்களின் உயிருக்கு பங்கம் ஏற்படும் வகையில் செயல்படும் சில மருத்துவமனைகளின் செயல்பாடு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதனை போன்று மாவட்டத்தில் தனியார் மருத்துவமனைகள் முறையாக அரசு அங்கீகாரம் பெற்று இருந்தாலும், அங்கு அந்த மருத்துவமனையின் பதிவுபெற்ற டாக்டர் இல்லாமல் அவர்கள் பெயரில் வேறு தகுதியற்ற போலி டாக்டர்களை கொண்டு சிகிச்சை அளிப்பது தெரியவந்தால் அந்த மருத்துவமனைகள் மீது உடடினயாக நடவடிக்கை மேற்கொண்டு மருத்துவமனைக்கு சீல் வைக்கப்படும்.
அந்த மருத்துவமனையை நடத்தி வந்த டாக்டர்களின் பதிவை ரத்து செய்யவும் மருத்துவ கழகத்துக்கு பரிந்துரைக்கப்படும். முறையாக அனுமதி பெறாமல் நடத்தப்படும் தனியார் மருத்துவமனைகளும் சீல் வைக்கப்படும்.
பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கொசு உற்பத்திக்கு காரணமானவர்கள் மீது தொடர்ந்து அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் தாம்பரம் நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார அலுவலர் அறிவுசெல்வம், சுகாதார ஆய்வாளர்கள் ஆல்பட், ஜனார்தனம், சிவகுமார் ஆகியோர் உடன் வந்தனர்.