

கடலூர்,
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகராட்சியில் கடந்த 2012-17-ம் ஆண்டில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்(நகர்புறம்) மூலம் ரூ.7 கோடியே 18 லட்சம் செலவில் குடிநீர் அபிவிருத்தி திட்ட பணிகள் நடைபெற்றது. இந்த பணிகளில் ஊழல் நடைபெற்று இருப்பதாக கடலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார்கள் வந்தன.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு பணிகள் தரம் இல்லாமல் இருப்பதும், இந்த பணிகளின் தரத்தை ஆய்வு செய்யும் அதிகாரிகள் அவற்றை கண்டுகொள்ளாமல் பணிக்கான தொகையை அனுமதித்து இருப்பதையும் கண்டுபிடித்தனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
சிதம்பரம் நகராட்சியில் வீடுகளுக்கு புதிதாக மீட்டருடன் குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக ரூ.1 கோடியே 31 லட்சம் ஒதுக்கப்பட்டது. ஆனால் நகராட்சியில் ஏற்கனவே இருந்த 5 ஆயிரத்து 300 இணைப்புகளுக்கும் புதிய இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக கணக்கு காண்பித்து அதற்கான பணம் எடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் சிதம்பரம் கனகசபை, பஸ்நிலையம் பகுதிகளில் நீர் உந்துநிலையம் அமைக்க ரூ.11 லட்சத்து 49 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. இதில் குடிநீர் அளவீட்டு கருவிகள் பொருத்தப்படவில்லை.
நல்லாம்புத்தூரில் சேதம் அடைந்துள்ள ஆழ்துளை கிணற்றை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ரூ.4 லட்சத்து 23 ஆயிரம் ஒதுக்கப்பட்டது. ஆனால் ஆழ்துளை கிணற்றை சீரமைக்காமலேயே சீரமைத்ததாக கணக்கு காண்பித்து அதற்குரிய செலவின தொகை பெறப்பட்டுள்ளது. பழுது மற்றும் பராமரிப்புக்காக ரூ.1 கோடியே 36 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதில் தரமற்ற பொருட்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடத்தில் பொருத்த வேண்டிய குடிநீர் வால்வுகள் அமைக்கப்படவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டன. சிதம்பரம் நகராட்சியில் குடிநீர் அபிவிருத்தி திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட தொகையில் மொத்தம் ரூ.3 கோடி அளவில் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிலையில் இப்பிரச்சினை தொடர்பாக குடிநீர் வடிகால் வாரிய சிதம்பரம் உதவி செயற்பொறியாளர்கள் அசோகன், பாண்டியன், விஜயகுமார், உதவி பொறியாளர்கள் விஜயலட்சுமி, காசி நாதன், சென்னை நெசப்பாக்கம் அன்னை சத்யா நகரை சேர்ந்த தனியார் ஒப்பந்ததாரர் ஆகிய 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.