குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.7¾ கோடியில் திட்டப்பணிகள் கலெக்டர் பிரபாகர் தகவல்

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கிடும் வகையில் ரூ. 7¾ கோடி மதிப்பில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.
குடிநீர் பற்றாக்குறையை போக்க ரூ.7¾ கோடியில் திட்டப்பணிகள் கலெக்டர் பிரபாகர் தகவல்
Published on: 

கிருஷ்ணகிரி,

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி, நகராட்சி, ஊராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மாவட்டம் முழுவதும் ரூ. 7 கோடியே 73 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் 197 திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அவற்றில் ஓசூர் நகராட்சிக்கு ரூ. ஒரு கோடியே 58 லட்சம் மதிப்பில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 21 பணிகள் மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்தல், மோட்டார் பேனல் போர்டு வைத்தல், ஊராட்சி பகுதிகளுக்கு 174 பணிகள் ரூ. 5 கோடியே 36 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இந்த பணிகள் ஒன்றிய பொது நிதி, ஊராட்சி பொது நிதி மற்றும் உபரி நிதியிலிருந்து புதிய ஆழ்துளை கிணறு அமைத்தல், புதிய மின்மோட்டார் மற்றும் பேனல் போர்டு அமைத்தல், ஆழ்துளை கிணறு ஆழப்படுத்துதல், ஆழ்துளை கிணறு கைப்பம்பு நீக்கம் செய்து ஆழப்படுத்துதல், திறந்த வெளி கிணற்றை ஆழப்படுத்துதல், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் எஸ்.டி.ஆர்.எப். திட்டத்தின் கீழ் ரூ. 85 லட்சம் மதிப்பில் 2 பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி கூரம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஆற்றுப்படுகையில் நீர் உறுஞ்சு கிணறு ரூ. 20 லட்சம் மதிப்பில் அமைக்கப்படுகிறது. முத்துராயன் கொட்டாய் கூட்டு குடிநீர் பணிகளுக்காக ரூ. 65 லட்சம் மதிப்பில் நீர் உறுஞ்சு கிணறு அமைக்க என மொத்தம் ரூ. 85 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com