நிவாரண பொருட்கள் வழங்க வருவதாக வதந்தி: சரத்குமாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்

ஆலங்குடியில் நிவாரண பொருட்கள் வழங்க வருவதாக வதந்தி பரவியதால் சரத் குமார் காரை பொதுமக்கள் முற்றகையிட்டனர்.
நிவாரண பொருட்கள் வழங்க வருவதாக வதந்தி: சரத்குமாரை முற்றுகையிட்ட பொதுமக்கள்
Published on

ஆலங்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கஜா புயலால் பாதிக்கப்பட்டது. ஆலங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள், மின்மாற்றிகள், மரங்கள் சாய்ந்தன. இந்நிலையில் நேற்று புயல் பாதிக்கப்பட்ட ஆலங்குடி பகுதிகளில் சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனர் நடிகர் சரத்குமார் நிவாரண பொருட்கள் வழங்க வருவதாக செய்தி பரவியது. இதனால் ஆலங்குடியில் உள்ள அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அரசமரத்தடி பஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது சரத்குமார் கார் வந்தது. இதையடுத்து அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் திடீரென சரத்குமார் காரை முற்றுகையிட்டனர்.

பின்னர் காரில் இருந்து சரத்குமார் இறங்கி பொதுமக்களிடம் பேசினார். அப்போது பொதுமக்கள் புயல் அடித்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை. அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு நிறுவனத்தினர், ஆலங்குடி வந்தும், எங்கள் பகுதியான அம்பேத்கர் நகர் மற்றும் கலிபுல்லா நகர் பகுதிகளுக்கு யாரும் வரவில்லை. எங்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்று கூறினர். பின்னர் உங்களது கோரிக்கைகளை சமத்துவ மக்கள் கட்சி சார்பில் அரசுக்கு தெரியப் படுத்துவேன் என்றும், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சரத்குமார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் சரத்குமார் காரில் புறப்பட்டு சென்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக புதுக்கோட்டையில் நேற்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கஜா புயல் தாக்கத்தால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேரில் வந்து பார்த்த போது உண்மையான சேதவிபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு பல்வேறு நிவாரண பணிகள் செய்து வருகிறது. அரசு ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்களின் பங்கு பாராட்டத்தக்கது. தமிழக அரசு தாங்களால் இயன்ற அளவு செய்து உள்ளது. மத்திய அரசிடம் இருந்து அதிக அளவு நிதி வாங்கி, இன்னும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தொகையை வழங்க வேண்டும். அரசை குறை கூறுவதை தவிர்க்க வேண்டும்.

மேகதாது அணை பிரச்சினை என்பது காலங்காலமாக நடந்து வருகிறது. தற்போது மத்திய அரசு ஆய்வுக்காக அனுமதி அளித்து உள்ளது வருத்தம் அளிக்க கூடிய செயல். அதற்காக அனைத்து கட்சிகளும் தமிழக அரசுடன் இணைந்து அழுத்தம் கொடுக்கலாமே தவிர அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துவதால் எந்தவித பயனும் இல்லை.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று ஆய்வறிக்கை அளிக்கப்பட்டு உள்ளது. அதன் உண்மை நிலையை தெரிந்து கொண்டு அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். அந்த ஆய்வு அறிக்கையை மீண்டும் ஒரு ஆய்வு நடத்தி அதில் என்னென்ன கூறப்பட்டு உள்ளது. அதை மூடுவதற்கு என்னென்ன செய்யலாம் என தமிழக அரசு முடிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com