சேலம் மாநகராட்சிக்கு மிதவை மோட்டார் மூலம் குடிநீர் எடுக்க சோதனை ஓட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறைந்ததால், சேலம் மாநகராட்சிக்கு அணையில் இருந்து மிதவை மோட்டார் மூலம் குடிநீர் எடுக்க சோதனை ஓட்டம்
சேலம் மாநகராட்சிக்கு மிதவை மோட்டார் மூலம் குடிநீர் எடுக்க சோதனை ஓட்டம்
Published on

மேட்டூர்,

சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டம்

மேட்டூர் அணையின் உள் பகுதியில் சேலம் மாநகராட்சி குடிநீர் திட்டத்திற்காக நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த நீரேற்று நிலையத்தில், மேட்டூர் அணையில் இருந்து நேரடியாக ராட்சத மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து நங்கவள்ளியில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுத்திகரிக்கப்பட்டு சேலம் மாநகருக்கு குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 35 அடியாக குறையும் நேரங்களில் இந்த நீரேற்று நிலையத்தில், அணையில் இருந்து நேரடியாக தண்ணீரை உறிஞ்சி எடுக்க முடியாது. எனவே, நீர்மட்டம் 35 அடிக்கு கீழ் குறையும் காலங்களில் மிதவை மோட்டார்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் உறிஞ்சி நீரேற்று நிலையத்தில் உள்ள தண்ணீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அங்கிருந்து வழக்கம் போல் தண்ணீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு சேலம் மாநகராட்சிக்கு குடிநீர் வினியோகம் நடைபெறும்.

மிதவை மோட்டார்

கடந்த ஆண்டு பருவமழை கை கொடுக்காததால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன்காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நீரேற்று நிலையத்தில் கடந்த வாரமே மிதவை மோட்டார்கள் பொருத்தும் பணி தொடங்கப்பட்டு 6 மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 35.54 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 21 கனஅடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 750 கனஅடி வீதம் தண்ணீர் தொடர்ந்து திறந்து விடப்படுகிறது. நீர்மட்டம் குறைந்ததால் அணையின் 16 கண் பகுதி வறண்டு காணப்படுகிறது.

இந்த நிலையில் அணையில் நேற்று மதியம் முதல், ஒரு மிதவை மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு நீரேற்று நிலைய தொட்டிக்கு அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றது. அணையின் நீர்மட்டம் 35 அடிக்கு கீழ் குறைந்தவுடன், மிதவை மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சி எடுக்கும் பணி தொடங்கும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com