

நொய்யல்,
ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் அரிஜன காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது22). இவர் தற்பாது கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே அய்யம்பாளையம் ஆதிதிராவிடர் தெருவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தியின் மனைவிக்கும், அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் தங்கைக்கும் பொது குடிநீர் குழாயில் தண்ணீர் பிடிப்பதில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி தனது மனைவி வைத்திருந்த குடத்தை காலால் எட்டி உதைத்து விட்டு மனைவியை வீட்டுக்கு அழைத்து சென்று விட்டார். அப்போது மணிகண்டன், கிருஷ்ணமூர்த்தியின் வீட்டிற்கு சென்று அவர் வைத்திருந்த செல்போனை பிடுங்கி கொண்டு சென்றுவிட்டார். இதில் அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி பின்னால் சென்று மணிகண்டனிடம் செல்போனை கேட்ட போது மணிகண்டன் தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் தனது வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து கிருஷ்ணமூர்த்தியை வெட்டினார். இதனால் அவருக்கு கழுத்து பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அக்கம், பக்கத்தினர் ஓடிவருவதை பார்த்த மணிகண்டன், கிருஷ்ணமூர்த்திக்கு கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி வழக்குப்பதிந்து, மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.