

திருமங்கலம்,
திருமங்கலம் அருகே குடிபோதையில் அரசு பஸ் கண்டக்டரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
அரிவாள் வெட்டு
திருமங்கலம் அருகே உள்ள கீழஉரப்பனூர் பகுதியைச் சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 33). அரசு பஸ் கண்டக்டர். இவர் நேற்று இரவு திருமங்கலத்தில் இருந்து காரியாபட்டி செல்லும் பஸ்சில் பணியில் இருந்தார். அப்போது திருமங்கலம் பஸ் நிலையத்தில் குராயூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (40) என்பவர் கூடக்கோவில் செல்வதற்காக பஸ்சில் ஏறினார். நுங்கு வெட்டும் தொழிலாளியான அவர் குடிபோதையில் இருந்தார்.
இதனால் பஸ்சில் ஏறியதிலிருந்து போதையில் தகாத வார்த்தைகளைப் பேசி கொண்டு வந்ததாக தெரிகிறது. மேலும் தன்னிடம் இருந்த நொங்கு வெட்டும் அரிவாளை காண்பித்து பயணிகளை அச்சுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இதை கண்டக்டர் பால்பாண்டி கண்டித்து உள்ளார். இதில் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணமூர்த்தி அரிவாளால் பால்பாண்டியை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர். இதனிடையே அரிவாளால் வெட்டியதை கண்டித்து அந்த வழித்தடத்தில் டிரைவர், கண்டக்டருக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக்கூறி நேற்று காலை முதல் திருமங்கலத்தில் இருந்து கூடக்கோவில் வழியாக எந்த அரசு பஸ்சை இயக்க மறுத்து அரசு பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போக்குவரத்து மேலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அந்த பஸ் அந்த வழித்தடத்தில் இயக்கப்பட்டது.