சகோதரர்களுக்கு அரிவாள் வெட்டு: அண்ணன்–தம்பிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கோர்ட்டு தீர்ப்பு
திருவையாறு,
தஞ்சை மாவட்டம் திருவையாறை அடுத்த கல்யாணபுரம் மனுநீதிப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் கர்ணன்(வயது48). டிரைவர். இவர் தனது தம்பி நாராயணசாமியுடன் கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27ந் தேதி அதே பகுதியில் உள்ள முனியாண்டவர் கோவில் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சாமிநாதன் மகன்கள் அய்யப்பன் (38), ராஜேஷ்(34) ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் 1வது வார்டில் கோவிந்தராஜ் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம் என கூறினர். இதனால் ஏற்பட்ட தகராறில் அய்யப்பன், ராஜேஷ் ஆகியோர் கர்ணனையும், நாராயணசாமியையும் அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கர்ணன்நாராயணசாமி சகோதரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இதுகுறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் கர்ணன் புகார் செய்தார். அதன்பேரில் திருவையாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவையாறு கோர்ட்டு நீதிபதி சோமசுந்தரம் நேற்று தீர்ப்பு கூறினார். அதில் அய்யப்பன், அவருடைய தம்பி ராஜேஷ் ஆகிய 2 பேருக்கும் 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

