

சிவகங்கை,
சிவகங்கை நகரில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் வாடகைக்கு இருப்பவர்களில் சிலர் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் உள்ளனர்.இதுபோல நகரில் பல வீடுகளில் பல ஆண்டுகளாக குடிநீர் கட்டணம் செலுத்தாமல் உள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை நகராட்சிகளின் மண்டல இயக்குனர் சரவணன் சிவகங்கை நகரில் நேரில் வந்து நகராட்சிக்கு வாடகை பாக்கி செலுத்தாத 2 கடைகளுக்கு சீல் வைத்தார். சிவகங்கை பஸ் நிலையம் பகுதியில் உள்ள ஒரு இருசக்கர வாகனம் பழுது நீக்கும் கடை மற்றும் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடை ஆகிய 2 கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அப்போது நகராட்சி ஆணையாளர் பாலசுப்ரமணியன், மேலாளர் ராஜேஸ்வரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். இதேபோல சிவகங்கை போலீஸ் நிலையம் தெருவில் உள்ள 2 வீடுகளில் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.
இதுதொடர்பாக நகரசபை ஆணையாளர் பாலசுப்ரமணியன் கூறும் போது, நகராட்சிக்கு உட்பட்ட மக்கள் வீட்டு வரி, குடிநீர் கட்டணத்தை முறைப்படி செலுத்த அறிவுறுத்தி வருகிறோம். வரி கட்டாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.