25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

கோழிப்பண்ணை உள்ளிட்ட 2 இடங்களில் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்
25 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Published on

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கோழிப்பண்ணை உள்ளிட்ட 2 இடங்களில் பதுக்கி வைத்து கடத்த முயன்ற 25 டன் ரேஷன் அரிசியை குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுகிறதா என்று தூத்துக்குடி மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மாப்பிள்ளையூரணி பகுதியில் உள்ள ஒரு லாரி புக்கிங் அலுவலகத்தில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் திடீரென அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது, அங்கு ஒரு லாரியில் தலா 50 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகளை சிலர் ஏற்றிக் கொண்டு இருந்தனர். போலீசை பார்த்ததும் அவர்கள் ரேஷன் அரிசி மற்றும் தங்கள் வாகனங்களையும் விட்டு விட்டு தப்ப முயன்றனர்.

பறிமுதல்

அப்போது, தூத்துக்குடி வண்ணார் 1-வது தெருவை சேர்ந்த சரவணன் மகன் கார்த்திக் குமார் (22) என்பவரை போலீசார் மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அங்கு வைத்து இருந்த தலா 50 கிலோ எடை கொண்ட 300 மூட்டைகளில் மொத்தம் 15 டன் ரேஷன் அரிசி மற்றும் லாரி, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தூத்துக்குடி குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக்குமாரை கைது செய்தனர். தலைமறைவானவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.

10 டன்

இதே போன்று கயத்தாறு-தேவர்குளம் ரோட்டில் உள்ள மானங்காத்தான் மின்சார வாரிய அலுவலகம் அருகே உள்ள ஒரு கோழிப்பண்ணையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அங்கு தலா 50 கிலோ வீதம் 200 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த சுமார் 10 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ரேஷன் அரிசியை பதுக்கிய மகாராஜன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com