391 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது

அருப்புக்கோட்டை, விருதுநகரில் 391 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்தனர்.
391 மதுபாட்டில்கள் பறிமுதல்; 4 பேர் கைது
Published on

அருப்புக்கோட்டை,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நாளில் மருந்துக்கடைகள், ஓட்டல்கள் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கில் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அருப்புக்கோட்டையில் முழு ஊரடங்கு நாளான நேற்று டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜபிரபு தலைமையில் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரம் தெருவில் சந்தேகப்படும்படியான வகையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்ததில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துமுருகன்(வயது 25) என்பதும், அனுமதியின்றி மதுவிற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 246 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் அதேபோல் புறவழிச்சாலையில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த பொய்யாங்குளத்தை சேர்ந்த அடைக்கலம்(35) என்பவரையும் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல விருதுநகர் அருகே நடுவப்பட்டியில் வச்சக்காரப்பட்டி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள ரெயில்வே கேட் அருகே மாரியம்மாள் (77) என்பவர் 45 மதுபாட்டில்களை வைத்திருந்தார். அவரிடமிருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். சதானந்தபுரத்தில் ரோந்து சென்ற போலீசார்அங்குள்ள குளியல் தொட்டி அருகே முத்தையா (37) என்பவரிடமிருந்து 30 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com