

திருவள்ளூரை அடுத்த நயப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (வயது 45). இவருக்கு மனைவி, 2 மகன்கள், 2 மகள்கள் உள்ளனர். இவர் அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். அதே கிராமத்தை சேர்ந்த 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி அடிக்கடி முனுசாமியின் வீட்டுக்கு சென்று அவரது மகன்கள், மகள்களுடன் விளையாடுவது வழக்கம். கடந்த சில நாட்களாக அந்த சிறுமி மன உளைச்சலுக்கு ஆளாகி காணப்பட்டார். இதை கவனித்த அவரது பெற்றோர் அந்த சிறுமியை டாக்டரிடம் அழைத்து சென்றபோது அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அந்த சிறுமி 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பெற்றோர் தன்னுடைய மகளிடம் விசாரித்தபோது இறைச்சி கடை நடத்தி வரும் முனுசாமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் இதை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியதாக கூறி கதறி அழுது புலம்பினார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து நேற்று முனுசாமியை கைது செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளை சிறையில் அடைத்தனர். இவர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது.