கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் குறைந்த அளவில் ஒதுக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் குற்றச்சாட்டு

தடுப்பூசி இல்லாததால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் மாவட்டத்துக்கு குறைந்த அளவிலே தடுப்பூசி ஒதுக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் குற்றம்சாட்டி உள்ளனர்.
கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீசாருடன் பொதுமக்கள் வாக்குவாதம் குறைந்த அளவில் ஒதுக்கப்படுவதாக சுகாதாரத்துறையினர் குற்றச்சாட்டு
Published on

கடலூர்,

கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தினசரி காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை கொரோனா தடுப்பூசி போடும் பணி நடக்கிறது. இங்கு கடலூர் நகரம் மட்டுமன்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினசரி வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

அதன்படி தினசரி 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

அந்த வகையில் நேற்று காலை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று காலை 6 மணிக்கே அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர்.

தகராறு

இந்த நிலையில் தடுப்பூசி போடும் பணி காலை 8.30 மணிக்கு வழக்கம்போல் தொடங்கியது. அப்போது கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி மட்டுமே பொதுமக்களுக்கு போடப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக கோவாக்சின் தடுப்பூசி போட காத்துக் கொண்டிருந்த பொதுமக்கள், தடுப்பூசி இல்லை என்றால் ஏன் முன்கூட்டியே எங்களிடம் கூறவில்லை

. இவ்வளவு நேரம் வீணாக தடுப்பூசி போட காத்துக்கொண்டு இருந்துள்ளோம் என்று கூறி ஆஸ்பத்திரி ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் தடுப்பூசி போட வந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரபரப்பு

அப்போது பொதுமக்கள் தாங்கள் காலை 6 மணி முதல் கோவாக்சின் தடுப்பூசி போடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இதுவரை எங்களிடம் தடுப்பூசி இல்லை என்று கூறாமல், தற்போது வந்து தடுப்பூசி இல்லை என்று கூறுகின்றனர். ஆஸ்பத்திரிக்கு வந்தவுடனே கூறியிருந்தால் நாங்கள் இவ்வளவு நேரமாக காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் பொதுமக்கள் தடுப்பூசி போட முடியாமல் ஏமாற்றத்துடன் வீடுகளுக்குத் திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

குறைவாகவே ஒதுக்கீடு

தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து சுகாதாரத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்திற்கு போதுமான அளவு கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்கப்படவில்லை. குறைவாகவே ஒதுக்கப்படுகிறது. தற்போது கோவிஷீல்டு தடுப்பூசி 1,200 டோஸ் இருப்பு உள்ளது. மக்கள் பெரும்பாலும் கோவாக்சின் தடுப்பூசி போடவே விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் கடலூர் மாவட்டத்திற்கு கூடுதலாக கோவாக்சின் தடுப்பூசி ஒதுக்குமாறு அரசிடம் கேட்டுள்ளோம். அதனால் விரைவில் தடுப்பூசி வந்ததும் மக்களுக்கு தடையின்றி போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com