

மதுரை,
ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது. ஐகோர்ட்டு தடை, அரசின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அதன்படி மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம், மறியல் செய்தனர். அதன் தொடர்ச்சியாக மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினார்கள். இதில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள். அவர்களுக்கு அலுவலக வளாகத்தின் ஒரு பகுதியில் சமையல் செய்யப்பட்டு மதியஉணவு பரிமாறப்பட்டது.
இரவிலும் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. இரவு அங்கேயே சாப்பிட்டனர். சிலர் கருப்பசாமி போல் வேடம் போட்டு ஆடினர். அங்கு போராட்ட கோரிக்கைகளை விளக்கும்வகையில் கலைநிகழ்ச்சிகளை நடத்த தொடங்கினார்கள். உடனே அங்கிருந்த போலீசார் அவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து செல்லுமாறு தெரிவித்தனர். ஆனாலும் செல்லமறுத்து நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கேயே படுத்து விடிய, விடிய போராட்டம் செய்தனர்.
நேற்று காலையில் மேலும் ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் போராட்டத்தில் வந்து கலந்து கொள்ளத் தொடங்கினார்கள். அதைதொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காலை 11 மணியளவில் போலீசார் கைது செய்தனர். 325 பெண்கள் உள்பட 730பேர் கைதானார்கள். கைதானவர்களை போலீசார் பஸ்களில் அழைத்து சென்றனர். அவர்கள் திருமணமண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அவர்கள் அனைவரும் மீண்டும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து போராட்டத்தில் கலந்து கொண்டனர். ரோட்டிலேயே அவர்கள் படுத்துக்கொண்டனர்.
இந்த நிலையில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தினரும் கலெக்டர்அலுவலகத்தில் உள்ள சங்ககட்டிடம் அருகில் நேற்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். ஆசிரியர்கள், அரசுஊழியர்கள் போராட்டம் காரணமாக கடந்த சில நாட்களாக அரசு அலுவலகங்களில் வழக்கமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.