திருச்சி மாவட்டத்தில் இதுவரை 7,871 பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 7,871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.
திருச்சி மாவட்டத்தில் இதுவரை 7,871 பேருக்கு கொரோனா பரிசோதனை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் பேட்டி
Published on

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் இதுவரை 7,871 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது என்று அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கூறினார்.

ஆலோசனை கூட்டம்

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று கொரோனா வைரஸ் நோய் தடுப்பு பணி தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. சுற்றுலா துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சுகாதார துறை, ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின்னர் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

7,871 பேருக்கு பரிசோதனை

திருச்சி மாவட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. மாவட்டத்தில் இதுவரை 7,871 பேருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இதில் 67 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் அவர்களுக்கு திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 61 பேர் பூரண குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 6 பேர் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

முதியோர் உதவித்தொகை

திருச்சி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் மட்டும் முதியோர் உதவி தொகை தலா ரூ.1000 வீதம் 1 லட்சத்து 4 ஆயிரத்து 245 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. நல வாரியம் மூலம் நாட்டுப்புறகலைஞர்கள் 1,558 பேருக்கு தலா ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு உள்ளது. கட்டுமான தொழிலாளர்கள் 29,495 பேருக்கும், டிரைவர்கள் 2,780 பேருக்கும், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 37,670 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டு உள்ளது.

முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு 99 நபர்களிடம் இருந்து ரூ.1 கோடியே 61 லட்சத்து 46 ஆயிரத்து 507-ம், பிரதமர் நிவாரண நிதிக்கு 4 பேரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயிரமும் திருச்சி மாவட்டம் சார்பில் பெறப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com