

பெங்களூரு,
கர்நாடக அரசின் தலைமை செயலகமாக செயல்பட்டு வரும் விதான சவுதா கட்டிடம் கட்டப்பட்டு 60 ஆண்டுகள் ஆகிறது. இதையொட்டி வைர விழா கொண்டாட்டத்திற்கு ரூ.26 கோடி நிதி ஒதுக்குமாறு சட்டசபை சபாநாயகர் கே.பி.கோலிவாட், கர்நாடக மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.
25, 26-ந் தேதி ஆகிய 2 நாட்கள் இந்த விழாவை நடத்தவும், கோலாகலமாக இந்த விழாவை கொண்டாடவும் அவர்கள் திட்டமிட்டனர். எம்.எல்.ஏ.க்கள்., எம்.எல்.சி.க்களுக்கு நினைவு பரிசாக ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள தங்க நாணயமும், தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வெள்ளி தட்டும் வழங்க அவர்கள் திட்டமிட்டதாக தகவல்கள் வெளியாயின.
மக்கள் வரிப்பணத்தில் எம்.எல்.ஏ.க்களுக்கு விலை உயர்ந்த நினைவு பரிசு எதற்கு கொடுக்க வேண்டும் என்று கூறி அதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மாநில அரசுக்கு நெருக்கடியான நிலை ஏற்பட்டது. இதையடுத்து சித்தராமையா, வைர விழா கொண்டாட்டத்தை 25-ந் தேதி ஒரு நாள் மட்டும் கொண்டாட வேண்டும் என்றும், இதற்கான செலவுகளை ரூ.10 கோடிக்குள் முடிக்க வேண்டும் என்றும் சித்தராமையா உத்தரவிட்டார்.
அதன்படி 2 நாட்கள் வைர விழா கொண்டாட்டம் ஒரு நாளாக குறைக்கப்பட்டுள்ளது. 25-ந் தேதி(நாளை) ஒரு மட்டும் இந்த விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை(புதன்கிழமை) சட்ட சபையின் சிறப்பு கூட்டம் நடக்கிறது. இந்த சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.
அதைத்தொடர்ந்து அவர் மேல்-சபை கூட்ட அரங்கத்தை நேரில் பார்வையிடுகிறார். அதன் பிறகு விதான சவுதா வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன் ஜனாதிபதியுடன் எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் குழு புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதைத்தொடர்ந்து கன்னட திரைப்பட இயக்குனர் சீதாராம் இயக்கியுள்ள கர்நாடக சட்டசபை கடந்து வந்த பாதை என்ற தலைப்பில் உருவாக்கியுள்ள குறும்படம் திரையிடப்படுகிறது.
அதைத்தொடர்ந்து பிரபல கன்னட திரைப்பட இயக்குனர் கிரிஸ் காசரவள்ளி இயக்கியுள்ள விதான சவுதா கட்டிடம் கட்டப்பட்டது குறித்த குறும்படம் திரையில் காண்பிக்கப்படுகிறது. இந்த படத்தில் ஒரு மணி நேர காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மாலை 5 மணிக்கு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி அங்குள்ள விருந்தினர் அரங்கத்தில் நடக்கிறது.போதிய நேரமின்மையால் கிராமி விருது பெற்ற ரிக்கி கெஜ்ஜின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் கர்நாடகத்தின் முதலாவது முதல்-மந்திரி கே.சி.ரெட்டி, கெங்கல் ஹனுமந்தய்யா, கடிதாள் மஞ்சப்பா ஆகியோரின் குடும்பத்தினர் கவுரவிக்கப்பட உள்ளனர். இந்த வைர விழாவையொட்டி விதான சவுதா கட்டிடம் வண்ணமயமான மின்னொளியில் ஜொலிக்கிறது.
இரவு நேரங்களில் இது கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது. மேலும் அந்த கட்டிடத்தை சுற்றிலும் பல்வேறு அலங்காரங்களும் செய்யப்பட்டுள்ளன. நாளைய தினம் அந்த கட்டிடத்தை சுற்றிலும் பூ அலங்காரமும் செய்யப்படுகிறது. மேலும் அரசின் முக்கியமான திட்டங்கள் 3டி தொழில்நுட்பத்தில் திரையில் திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிகளில் முதல்-மந்திரி சித்தராமையா, சபாநாயகர் கே.பி.கோலிவாட், மேல்-சபை தலைவர் சங்கரமூர்த்தி மற்றும் மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு விதான சவுதாவை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.