

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தலைமை தாங்கி பேசுகையில், பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசால் எம்.ஜி.ஆர். பாரம்பரிய நெல் பாதுகாவலர் விருது வழங்கப்படுகிறது. எனவே பாரம்பரிய நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் நெல் ரகம், நடவு தேதி மற்றும் உரிய நில ஆவணங்களுடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை அணுகி ரூ.100 செலுத்தி பயிர் விளைச்சல் போட்டியில் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு பதிவு செய்திட வருகிற ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கடைசி நாள் ஆகும். மாநில அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் அதிக மகசூல் எடுக்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.70 ஆயிரமும் வழங்கப்படும், என்றார்.
அதைத்தொடர்ந்து விவசாயி தங்கராஜ் பேசுகையில், குடுமியான்மலை பகுதியில் உள்ள மலையடி பள்ளத்தில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலைகளின் இருபுறங்களிலும் தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பிகள் தற்போது சேதமடைந்துள்ளன. எனவே கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
விவசாயி ஆரோக்கியசாமி பேசுகையில், குன்னண்டார்கோவிலில் மின்சார வாரிய அலுவலக வளாகத்தில் உள்ள முட்புதர்களை நூறு நாள் திட்ட பணியாளர்களை கொண்டு அகற்ற வேண்டும். வனத்துறையில் தற்போது தைலமரங்களை அறுவடை செய்து வருகின்றனர். இவ்வாறு அறுவடை செய்யும் பகுதியில் மீண்டும் தைலமரங்களை நடுவதை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் பாசன குளத்தில் தைலமரங்களை சாகுபடி செய்ய தடை விதிக்க வேண்டும், என்றார்.
தமிழக அரசு காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்திற்கு உடனடியாக அரசாணை வெளியிட்டு, பணியை தாமதமின்றி விரைந்து தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து விவசாய பிரதிநிதிகளை சேர்த்து ஒரு குழுவை தொடங்க வேண்டும், என்று விவசாயி மிசா.மாரிமுத்து கூறினார்.
ராமசாமி பேசும்போது, கல்லணை கால்வாய் பகுதியில் தூறல் மழை தான் பெய்கிறது. இதனால் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்தக் கூடாது. வரத்துவாரிகளை போர்க்கால அடிப்படையில் தூர்வார வேண்டும். பாசன குளங்களை மீன் வளர்ப்போருக்கு குத்தகை விடும்போது, விவசாயிகள் சங்கத்தின் மூலமாக விட வேண்டும். பயிர் காப்பீடு செய்ய மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என்பதை தவிர்த்து, கூட்டுறவு சங்கத்திலேயே பயிர் காப்பீடு செய்ய வழிவகை செய்ய வேண்டும். அல்லது விவசாயிகள் எளிதில் பயிர் காப்பீடு செய்யும் வகையில் மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும், என்று கூறினார்.
தனபதி பேசுகையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட மரப்பயிர்களுக்கு இதுவரை இழப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதற்கு வனத்துறை அதிகாரிகள் தான் காரணம். புதுக்கோட்டை, அறந்தாங்கி வனத்தோட்ட பகுதிகளில் நீதிமன்ற உத்தரவைமீறி முந்திரி மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இ-அடங்கல் முறையை பல அரசு அலுவலகங்களில் ஏற்றுக்கொள்ளவில்லை, என்றார்.
மத்திய கூட்டுறவு வங்கியில் கணக்கு தொடங்க பணியாளர்கள் பற்றாக்குறை, விண்ணப்பப்படிவங்கள் இல்லை. இதுபோன்ற பல்வேறு குளறுபடிகள் உள்ளன. இவற்றை சரிசெய்து, விவசாயிகள் விரைவாக கணக்கு தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று விவசாயி சுப்பையா கூறினார்.
விவசாயி பவுன்ராஜ், கரும்பு வெட்டும் பணி இதுவரை தொடங்கப்படவில்லை. எனவே உடனடியாக கரும்பு வெட்டும் பணியை தொடங்க வேண்டும். கரும்பு விவசாயிகளுக்கு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வங்கியில் உள்ள விண்ணப்பப்படிவங்களில் கட்டாயம் தமிழ் இடம்பெற வேண்டும். சோளத்திற்கும் அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும், என்று கூறினார். தொடர்ந்து விவசாயிகள் பலர் பேசினார்கள். பின்னர் விவசாயிகளுக்கு பதில் அளித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேசினார்கள்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, வேளாண்மை இணை இயக்குனர் சுப்பையா, கூட்டுறவுத்துறை மண்டல இணை பதிவாளர் உமா மகேஸ்வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தீபாசங்கரி உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.