கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகையையொட்டி நடந்த சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

ஈஸ்டர் பண்டிகை

ஏசு உயிர்த்தெழுந்த நாளை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள். உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்களால் ஈஸ்டர் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

கிருஷ்ணகிரியில் பெங்களூரு சாலையில் உள்ள தூய பாத்திமா அன்னை தேவாலயத்தில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனை நேற்று முன்தினம் இரவு நடந்தது. பங்கு தந்தை இசையாஸ் பிரார்த்தனையை செய்தார். முன்னதாக, அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் இருந்து 3-வது நாள் ஏசு உயிர்த்தெழும் நிகழ்வு ஒளி வெள்ளத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

இதனை தொடர்ந்து, ஏசுவை வரவேற்கும் வகையில் அனைவரும் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதில், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com