கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் முழுவதும் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகை

தர்மபுரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன்தினம் இரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைபடி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடனும் பங்கேற்றனர்.

தர்மபுரி தூய இதய ஆண்டவர் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தர்மபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தலைமை தாங்கினார். பங்குத்தந்தை அருள்ராஜ், உதவி பங்குத்தந்தை ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி ஏசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த குடிலில் குழந்தை ஏசுவுக்கு மறைமாவட்ட ஆயர் சிறப்பு வழிபாடுகள் நடத்தினார். தொடர்ந்து சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயம்

இதேபோன்று தர்மபுரியில் உள்ள சி.எஸ்.ஐ. சீயோன் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. ஆயர் சுரேஷ் பாபு தலைமையில் நடந்த இந்த பிரார்த்தனையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் ஆயர் அருளாசி வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருவிருந்து நடைபெற்றது.

இதேபோல் தர்மபுரி வேப்பமரத்துகொட்டாய் ஏ.ஜி. சர்ச்சில் பாதிரியார் சுந்தர்சிங் தலைமையிலும், கோவிலூர் தேவாலயத்தில் பங்குத்தந்தை ஏசுராஜ் தலைமையிலும், செல்லியம்பட்டியில் பங்குத்தந்தை மதுரைமுத்து தலைமையிலும், பாலக்கோட்டில் பங்குத்தந்தை சபரியப்பன் தலைமையிலும், பூலாப்பட்டியில் பங்குத்தந்தை புஷ்பராஜ் தலைமையிலும், தென்கரைக்கோட்டையில் பங்குத்தந்தை வினோத் தலைமையிலும், பொம்மிடியில் பங்குத்தந்தை அந்தோணிசாமி தலைமையிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com