நீட் தேர்வில் விலக்கு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் மத்திய அரசு அனுமதி கோரி சட்டசபையில் தீர்மானம்

புதுச்சேரி, நீட் தேர்வில் புதுச்சேரிக்கு விலக்கு அளிப்பது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்ற மத்திய அரசு அனுமதிக்க கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நீட் தேர்வில் விலக்கு, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் மத்திய அரசு அனுமதி கோரி சட்டசபையில் தீர்மானம்
Published on

சட்டமன்ற தீர்மானம்

புதுவை சட்டசபையில் நீட் தேர்வில் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்கும் தீர்மானம், ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்திட உரிய சட்டத்தை புதுச்சேரி அரசு நிறைவேற்ற அனுமதி அளிக்க மத்திய அரசை வலியுறுத்தும் தீர்மானம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் சட்டசபையில் முன்மொழிந்தார். நேற்று அதன்மீது எம்.எல்.ஏ.க்கள் பேசினார்கள்.

இறுதியாக முதல்-அமைச்சர் நாராயணசாமி இந்த தீர்மானங்களின் மீது பேசியதாவது:-

நீட் தேர்வால் குழப்பம்

புதுவையில் 1,200 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதில் சுமார் 400 இடங்கள் சென்டாக் மூலம் நிரப்பப்படுகிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இருந்து அதிக இடங்களை பெற்றுள்ளோம். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அடிப்படையில் மத்திய அரசு நீட் தேர்வினை நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு காரணமாக கடந்த ஆண்டு கடும் குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக நான் டெல்லி சென்று சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோரை சந்தித்துப் பேசினேன். நீட் தேர்வு எழுத ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். இதுகுறித்த விவரங்கள் மத்திய அரசுக்குத்தான் தெரியும். கடந்த முறை புதுச்சேரி மாநிலத்தில் இருந்து எவ்வளவு பேர் தேர்வு எழுதினார்கள். அதில் தேர்ச்சிபெற்றவர்கள் எத்தனை பேர் என்ற விவரங்களும் மத்திய அரசிடம் இருந்து கிடைக்கப்பெறவில்லை.

கடந்த 17-ந்தேதி பெற்றோர் சங்கத்தினர் என்னை சந்தித்துப் பேசினார்கள். அப்போது நீட் தேர்வுகள் சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அடிப்படையிலேயே நடப்பதாகவும், இதில் நமது மாநில மாணவர்கள் வெற்றிபெறுவது கஷ்டம் என்றும் தெரிவித்தனர். நமது மாநிலத்தின் நிலையை கூறி இதில் இருந்து விலக்கு பெறலாம் என்றும் கூறினார்கள். இதேபோல் தமிழக அரசும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு கேட்டுள்ளது.

அறவழிப் போராட்டம்

ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள், இளைஞர்கள் அறவழிப் போராட்டம் நடத்தி தமிழர்களின் உணர்வினை உலகம் முழுவதும் தெரியவைத்தார்கள். தமிழகத்தில் பல மாவட்டங்களில் போராட்டம் நடந்தது. புதுவையிலும் மாணவர்கள், இளைஞர்கள் ரோடியர் மில் மைதானத்தில் போராடினார்கள். அதில் பெற்றோரும் கலந்துகொண்டனர்.

இந்த போராட்டத்தில் மாணவர்களின் சக்தியை முழுமையாக பார்க்க முடிந்தது. போராட்டம் முடிந்ததும் மாணவர்கள் என்னை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து தமிழக அரசும் நடவடிக்கை எடுத்து அவசர சட்டம் கொண்டுவந்தது. பின்னர் அதை சட்டசபையில் நிறைவேற்றி நிரந்தர சட்டம் ஆக்கியது.

சட்டம் இயற்ற அனுமதிக்க வேண்டும்

புதுவையின் பல்வேறு பகுதிகளில் மஞ்சுவிரட்டு போன்ற நிகழ்ச்சிகள் நடக்கின்றன. எதிர்காலத்தில் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தடை ஏதும் வராத வகையில் சட்டம் இயற்றுவது அவசியம். அதற்கு தேவையான சட்டத்தை நிறைவேற்றிட அனுமதி அளிக்க மத்திய அரசை நாம் இந்த சட்டசபை மூலம் வலியுறுத்துகிறோம்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.
தொடர்ந்து இந்த இரு தீர்மானங்களும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com